×

தென் தமிழகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கழுகுமலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் சுணக்கம்

கழுகுமலை : புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட கழுகுமலையில் மேம்பாட்டு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட கழுகாசலமூர்த்தி கோயில், மலை மீது அமைந்துள்ள சமணர் சிற்பங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோயில் ஆகியவை மிகவும் சிறப்பு பெற்றதாகும். தென் தமிழகத்தின் எல்லோரா என்று அனைவராலும் அழைக்கப்படும் கழுகுமலைக்கு கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரை தினமும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கழுகுமலையில் உள்ள மலை தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த துறை சார்பில் அங்கு இரண்டு காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு வாய்ந்த கழுகுமலையை கடந்த 15.7.2014 அன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் புராதன நகரமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.இதையடுத்து மலை மீதுள்ள வெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை சுற்றுலா பயணிகள் சிரமமின்றி மலை மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகளின் இருபுறமும் கம்பிகள் அமைக்கப்பட்டன. மலையில் சமணர் சிற்பங்கள் உள்ள இடம், வெட்டுவான் கோயில் உள்ள இடம் ஆகியவற்றை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.  மலையின் நுழைவாயில் பகுதியில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.ஆனால், வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம் இல்லை. இவர்கள் கோவில்பட்டி, சங்கரன்கோவில் அல்லது திருநெல்வேலிக்கு சென்று தான் தங்க வேண்டும். சமணர் சிற்பங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கூட தங்குவதற்கு இடமில்லாததால் அவர்களும் வெளியூர்களிலேயே தங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே போல், இங்கு வெளிநாட்டு பயணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கென சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.  இந்த சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. அதேபோல், மலை மீது சுற்றுலா பயணிகள் படிக்கட்டுகளில் எளிதாக செல்ல அமைக்கப்பட்ட பக்கவாட்டு கம்பிகள் ஆங்காங்கே உடைந்து கிடக்கின்றன. மலையின் மேல் பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் அய்யனார் சுனை அருகேயும், பெரியவர்களுக்கான பூங்காவிலும் மது பாட்டில்கள் நொறுங்கி கிடக்கின்றன. தற்போது பராமரிப்பு இல்லாததால், மலை நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான பூங்கா பயனற்று காணப்படுகிறது. இங்குள்ள இருக்கைகள் கூட உடைந்து கிடக்கின்றன. கொரோனா காலம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சி மாணவர்கள் கழுகுமலைக்கு வருவர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய அரசு முன்வர வேண்டும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்து, அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சமணர் சிற்பங்கள் மற்றும் வெட்டுவான் கோயில் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், மலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தென் தமிழகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கழுகுமலையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் சுணக்கம் appeared first on Dinakaran.

Tags : Kalgumalai ,Ellora ,South Tamil Nadu ,Kalgukumalai ,Thoothukudi District ,Kalgakumalai ,
× RELATED கனமழை எச்சரிக்கை எதிரொலி சுற்றுலா...