×

ராணுவத்துக்கு உதவுவதே விமானப்படையின் வேலை முப்படை தலைமை தளபதி பேச்சால் கிளம்பியது சர்ச்சை: ஒருங்கிணைந்த தளபதி நியமனத்தில் அதிருப்தி

புதுடெல்லி: விமானப்படையின் பங்கு பற்றி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறிய கருத்தும், ஒருங்கிணைந்த தளபதி நியமனம் திட்டமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியாவின் முப்படைகளாக ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளது. தற்போது, இந்த மூன்று படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் உள்ளனர். மேலும், இந்த மூன்று படைகளுக்கும் சேர்த்து ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் இருக்கிறார். பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பதவிக்கு வந்த பிறகு, ‘முப்படை தலைமை தளபதி’ பதவி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், ராணுவத்தை இன்னும் சிறப்பாக வழி நடத்துவதற்கான மூன்று படைகளுக்கும் சேர்த்து, பிராந்திய ரீதியாக 4 ஒருங்கிணைந்த தளபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவத்தை வழிநடத்த, முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து திட்டமிடுவதாலும், அங்கு மூன்று படைகளும் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது. இந்த பலனின் அடிப்படையிலேயே, 4 ஒருங்கிணைந்த தளபதிகளை நியமிக்கும் தி்ட்டம் உருவாகி இருக்கிறது. இதன்படி, நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு பிராந்தியங்களிலும், முப்படைகளை ஒருங்கிணைத்து வழிநடத்தவே இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் நேரடியாக முப்படை தலைமை தளபதிக்கு மட்டுமே தகவல் அளிக்க கடமைபட்டவர்களாக இருப்பார்கள்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த தீவிரவாத தடுப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ‘ராணுவத்தில் இருந்து மூன்று ஒருங்கிணைப்பு தளபதிகளும், கடற்படையில் இருந்து ஒரு ஒருங்கிணைப்பு தளபதியும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. விமானப்படை என்பது, ராணுவத்துக்கும், கடற்படைக்கும் உதவி செய்வதற்கான ஒரு பிரிவுதான்,’ என்று கூறினார். ராவத்தின் இந்த கருத்தாலும், விமானப்படையில் இருந்து ஒருங்கிணைப்பு தளபதி தேர்வு செய்யப்படாததும் விமானப்படையில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி விமானப்படை தளபதி பதவுரியா அளித்த பேட்டி ஒன்றில், ‘ஒருங்கிணைந்த தளபதி நியமன முயற்சிக்கு விமானப்படை ஆதரவாக இருக்கும். ஆனால், அது சரியான முறையில் நடைபெற வேண்டும். வான்வெளி பாதுகாப்பில் விமானப்படை மிகப்பெரிய பங்காற்றுகிறது,’ என்று ராவத்தின் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ராணுவ வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post ராணுவத்துக்கு உதவுவதே விமானப்படையின் வேலை முப்படை தலைமை தளபதி பேச்சால் கிளம்பியது சர்ச்சை: ஒருங்கிணைந்த தளபதி நியமனத்தில் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Air Force ,Tri-Army ,New Delhi ,Triforce ,Bipin Rawat ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...