×

சிவகளை 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகளில் சிதைந்த நிலையில் மண்டை ஓடு மீட்பு

ஏரல் :  சிவகளை 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டன. இதில் சிதைந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடைத்தன.தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில்  கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பானை ஓடுகள், இரும்பு பொருட்கள், பாறை கிண்ணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கீறல்கள், குறியீடுகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து இந்தாண்டு சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் 2ம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வும் கடந்த பிப். 26ல் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. சிவகளை, பேட்மாநகரம், மூலக்கரை பகுதிகளில் 18 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் தொல்லியல் அலுவலர்கள் விக்டர் ஞானராஜ், பரத்குமார் மற்றும் 40 பணியாளர்கள் அகழாய்வு பணியை மேற்கொண்டனர். இதேபோல் மக்கள் வாழ்விட பகுதியை கண்டறிந்திட மத்திய தொல்லியல் துறை 6 இடங்களுக்கு அனுமதி அளித்தது. அதன்பேரில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, செக்கடி திரடு ஆகிய மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சிவகளை பரும்பு, பேட்மாநகரம், மூலக்கரை பகுதியில் கடந்த 4 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 40 முதுமக்கள் தாழிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன்  முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டன. சிவகளை பரும்பில் திறக்கப்பட்ட  முதுமக்கள் தாழிகளில் இருந்து சிறு சிறு எலும்புகள் மற்றும் எலும்பு துகள்களை பேராசிரியர் குமரேசன் தலைமையிலான குழுவினர் சேகரித்தனர். முதல் தாழியில் இருந்து சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்தன. பெரிய அளவிலான தாழியை திறந்துபார்த்த போது சிதைந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடைத்தன. இதையடுத்து மற்ற தாழிகளையும் திறந்து அதில் உள்ள பொருட்களை சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுகுறித்து பேராசிரியர் குமரேசன் கூறுகையில் ‘‘சிவகளையில் முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு அதில் கிடைக்ககூடிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் இருந்து கிடைக்ககூடிய எலும்புகள், காரணிகளை உயிர் மரபியல் சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கொண்டு சென்று பரிசோதனை நடத்தப்படும். இப்பரிசோதனையில் இருந்து இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் காலங்கள் கண்டறியப்படும்’’ என்றார். நிகழ்ச்சியில் சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், கொற்கை அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை, சிவகளை ஆசிரியர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post சிவகளை 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகளில் சிதைந்த நிலையில் மண்டை ஓடு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sivakalai 2 phase ,Department ,Madurai Kamarajar ,University of Madurai ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு