×

விலங்குகள் மீது அன்பு செலுத்துவதால் அலியா பட்டுக்கு பீட்டா விருது

புதுடெல்லி: விலங்குகள் மீது அன்பு செலுத்தி வருவதால் நடிகை அலியா பட்டுக்கு ‘பீட்டா - இந்தியா’ விருது வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான ‘பீப்பிள் ஃபார் தி எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்’ (பீட்டா), ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் மீது அன்பு செலுத்துவோருக்கும், அதனை ஊக்குவிப்போருக்கும் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டின் சிறந்த நபராக பாலிவுட் நடிகை அலியா பட் பெயரை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து பீட்டா அமைப்பின் இந்திய பிரபலங்கள் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் சச்சின் பங்கேரா கூறுகையில், ‘நடிகை அலியா பட் சைவ உணவு உண்பதை ஊக்குவிக்கிறார்.

விலங்குகளிடம் கருணையும், அன்பையும் காட்ட அடுத்த தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். நாய், பூனை போன்ற விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்; விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் பீட்டா அமைப்பின் பிரசாரத்தில் பங்கேற்றார். மேலும், விலங்குகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதற்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பீட்டா - இந்தியா ஃபேஷன் விருது வழங்கப்படுகிறது’ என்றார்.

முன்னதாக பீட்டா - இந்தியா விருது பெற்றவர்கள் வரிசையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகைகள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் கபூர் அஹுஜா போன்ற சிலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Alia Pattu ,
× RELATED ரன்பீர், அலியா பட்டுக்கு குதிரைகள் பரிசளிப்பு