×

 விவாதமாகும் பாதுகாப்பு

கிழக்கு லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, சீனப்படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலுக்குப் பிறகு இந்திய எல்லையில் எப்படியாவது தனது ஆதிக்கத்தை செலுத்தியாக வேண்டும் என்ற நோக்கத்தில், இலவு காத்த கிளி போல சீனா காத்திருந்தது. அதேநேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காட்டும் பாதுகாப்பு ஆர்வத்தை பிற பகுதிகளில் ஒன்றிய அரசு காட்டவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டாக உருவெடுத்தது. இந்நிலையில் அருணாசலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீனாவின் அத்துமீறல் கடந்த 9ம் தேதி அரங்கேறியிருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. சீக்கிய மற்றும் ஜாட் படைப்பிரிவை சேர்ந்த 22 வீரர்களை கொண்ட இந்திய ராணுவம், இந்திய-சீன எல்லையான தவாங் செக்டாரில், கடந்த 9ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு வந்த 300க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் உள்ள முக்கியமான சிகரத்தை கைப்பற்ற சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், அதனால் இந்திய ராணுவத்தினர் அவர்களை விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் அத்துமீறல் அதிகமாக உள்ளது என்று பல காலமாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால் ஆளும் பாஜ அரசு அதனை மூடி மறைப்பதுபோலவே நடந்துகொள்கிறது. எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தும் ஒன்றிய அரசு, சீனா விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது. இப்போதுகூட 9ம் தேதி நடந்த மோதல் தாமதமாகத்தான் தெரிவிக்கப்படுகிறது. தவாங் செக்டாரில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, ‘இது தொடர்பாக கடந்த 11ம் தேதி, இருதரப்பு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சீன ராணுவம் எல்லை மீறல் குறித்து மறுப்பு தெரிவித்தது’ என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் கொடுத்தார். ஆனால் இந்த விளக்கத்தை எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது. அகிலஇந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, ஒன்றிய அரசின் மெத்தனத்தை வெளிச்சம் ேபாட்டு காட்டியுள்ளது. ‘‘எல்லை பிரச்னை விவகாரத்தில் மத்திய அரசு எப்போதும் தூக்கத்தில்தான் இருக்கிறது. அதை எழுப்புவதற்கு காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் பலமுறை அரசாங்கத்தை எச்சரித்துள்ளோம். ஆனால் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள, வழக்கம் போல் ஒன்றிய அரசு மவுனத்தில் ஆழ்ந்துள்ளது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைககள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். நமது வீரர்களின் துணிச்சலையும், வீரத்தையும் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாட்டை விட யாரும், பெரியவர்கள் கிடையாது. ஆனால் பிரதமர் தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். லடாக்கில் சீனாவின் முன்னேற்றம் கவலை அளிக்கிறது,’’ என்ற பதிவு, நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அரசியல் வேண்டாம் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது….

The post  விவாதமாகும் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Galwan Valley ,eastern Ladakh ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...