×

டெல்லி கார் குண்டுவெடிப்பில் பள்ளித் தோழி பலியால் இதயம் நொறுங்கிவிட்டது: பாயல் கோஷ் உருக்கம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பில் தனது நெருங்கிய பள்ளித் தோழி உயிரிழந்ததாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில், பிரபல நடிகை பாயல் கோஷின் நெருங்கிய பள்ளித் தோழியான சுனிதா மிஸ்ராவும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி, திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள நடிகை பாயல் கோஷ், மிகுந்த வேதனையுடன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கண்ணீர்மல்கக் கூறுகையில், ‘என் தோழி சுனிதா உயிருடன் இல்லை என்பதை என் மனதால் நம்பவே முடியவில்லை. அவள் மிகவும் கலகலப்பானவர்; எப்போதும் சிரித்த முகத்துடன் நேர்மறையான கருத்துகளை மட்டுமே கூறுவார். இவ்வளவு கொடூரமான முறையில் அவரை நம்மை விட்டுப் பிரிந்து சென்றது நம்ப முடியவில்லை. அவர் எனக்கு ஒரு தோழி என்பதை விட, என் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார். நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்; எங்கள் கனவுகள், சிரிப்புகள், போராட்டங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம்’ என்று உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகக் கூறிய அவர், பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Delhi ,Boyal Ghosh ,New Delhi ,Bollywood ,Sengkot ,Sunita Mishra ,
× RELATED சாரா விமர்சனம்