×

முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், வாழையிலை விலை ‘கிடுகிடு’

சென்னை: முகூர்த்தநாளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் வாழையிலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களை வாங்க பொதுமக்கள் வராததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு, மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தினமும் லாரிகளில் பூக்கள் வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை பூ மார்க்கெட்டில் மல்லி மற்றும் முல்லை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. அந்த வகையில், ஒரு கிலோ மல்லி ரூ.2,300க்கும், முல்லை பூ ரூ.1,200க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சம்பங்கி ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், அரளி ரூ.250க்கும், சாமந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘இன்று முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லி மற்றும் முல்லை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை புறநகர் வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வராததால் பூக்கள் விற்பனையாகவில்லை. வியாபாரம் இல்லாததால் வேதனையடைந்துள்ளோம். 2 நாட்கள் முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் இதே விலையில் விற்பனை செய்யப்படும்.’’ என்றார். இதேபோன்று, வாழை இலையும் முகூர்த்த நாளையொட்டி விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 6 லாரிகளில் குறைவான வாழை இலை கட்டுகள் வந்துள்ளன.ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000 க்கும் ஒரு வாழை இலை ரூ.10 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாழை இலை விலை உயர்ந்தாலும் இதனை பொருட்படுத்தாமல் இல்லத் தரிசிகள் கொட்டும் மழையிலும் வாழை இலை வாங்க குவிந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கட்டுவாழை இலை ரூ.2.300க்கும் ஒரு வாழை இலை ரூ.13 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வாழை இலை வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘வரத்து குறைவு, மழை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் வாழை இலை கட்டுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கார்த்திகை தீபம் முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.1700க்கும் ஒரு வாழை இலை ரூ.8க்கும் விற்பனை செய்யப்பட்டது நேற்று காலை ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000க்கும் ஒரு வாழை இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் புதன்கிழமை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும்.’’ என தெரிவித்தார்….

The post முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள், வாழையிலை விலை ‘கிடுகிடு’ appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Muurdha ,Chennai ,Coimbed Market ,Muhurat Day ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...