×

நல்ல விஷயங்களைவிட எளிதில் மக்களை சென்றடையும் தீய விஷயங்கள் வன்முறை, காதல், காமம் என எல்லை மீறுகிறதா வெப் சீரிஸ்: எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

பெரம்பூர்: வசனமே இல்லாமல் ஊமை மொழியாக படம் பார்த்தது ஒரு காலம். அதை தொடர்ந்து, கருப்பு வெள்ளை படங்கள் சிறிது காலம் மக்களை ஆச்சரியப்பட வைத்தன. அதனை பின்னுக்கு தள்ளும் வகையில், கலர் படங்கள் வந்தன. நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற அசுர வளர்ச்சியால் சினிமா துறையில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு டிஜிட்டல் கியூப் என மாறி இறுதியாக நாம் அனைவரும் பயன்படுத்தும் செல்போனில் வந்து நிற்கிறது சினிமா துறை.  தற்பொழுதுள்ள காலகட்டத்தில் முன்பு மாதிரி ஒரு படம் 200 நாட்கள், 100 நாட்கள் என ஓடுவது கிடையாது. அதிகபட்சம் 15 நாட்கள் ஓடினாலே அந்த படத்தை ஓடிடி எனப்படும் சமூக வலைதள பக்கத்திற்கு விற்று விடுகிறார்கள். அதன்பின்பு அந்த படத்தை யார் வாங்குகிறார்களோ அந்த சமூக வலைதள பக்கத்aதில் அந்த படம் வெளியாகும். பிறகு நாம் செல்போனில் குறிப்பிட்ட அந்த படத்தை டவுன்லோடு செய்து பார்த்துக் கொள்ளலாம். இப்படி, தியேட்டர்களுக்கு சென்று ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து படம் பார்த்த காலம் மாறி தற்போது செல்போனில் வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கும் தொழில்நுட்பத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு துறையின் வளர்ச்சியால் மற்றொரு துறை அழிவுப்பாதைக்கு செல்வதை தடுக்க முடியாத காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். அந்த வகையில், பல சினிமா திரையரங்கங்கள் தற்போது திருமண மண்டபங்களாகவும் வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டன. காரணம், முன்பு போல கூட்டம் கூட்டமாகவோ அல்லது குடும்பம் குடும்பமாகவோ மக்கள் திரையரங்கில் குவிவது கிடையாது. இதனால் தற்போது வரும் திரையரங்குகள் அனைத்தும் 200, 300 சீட்டுகள் உள்ளவாறு கட்டமைப்பு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஓடினாலே அது வெற்றிப்படம் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. இந்த படங்களுக்கும் வேட்டு வைக்கும் வகையில், தற்பொழுது வெப் சீரிஸ்  எனப்படும் ஒன்று மிகப் பிரபலமாக மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. தமிழில் வெப் சீரிஸ்  என்றால் வலைத்தொடர் என கூறுவார்கள். ஆனால், வலைத்தொடர் என்றால் பலருக்கும் தெரியாது. வெப் சீரிஸ் என்றால் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் நன்றாக தெரியும். இந்த வெப் சீரிஸ்  எனப்படும் தொடர்கள் நாடக வடிவில் ஒவ்வொரு அத்தியாயங்களாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் இரண்டு வருடம், மூன்று வருடம் செல்லும் நாடகங்கள் போன்று இல்லாமல் எபிசோடு கணக்கில் 5 எபிசோடு, 10 எபிசோடு என அத்துடன் கதை முடிந்து விடுகிறது. இந்த எபிசோடுகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 1990களில் பிற்பகுதியில் வெப் சீரிஸ் தோன்றியது. அதன் அசுர வளர்ச்சியால் இரண்டாயிரத்தின் முற்பகுதியில் மிகவும் பிரபலமடைந்து மேற்கத்திய நாடுகளில் பலரும் இதற்கு அடிமையாகினர். கையில் உள்ள செல்போன் மூலம் எளிதில் படம் பார்க்கும் வசதி வந்தால் யார்தான் அடிமையாக மாட்டார்கள். அந்த அளவிற்கு வெப் சீரிஸ்  மோகம் மேலை நாட்டை ஆட்டி படைத்தது. மேலை நாடுகளில் இதற்கு தனியாக சிறந்த வலைத்தொடர் அதாவது, சிறந்த வெப் சீரிஸ் விருதுகளும் வழங்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு பிற்பகுதியில் தமிழ் மொழியில் வெப் சீரிஸ்  உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்மொழியிலும் வெப் சீரிஸ் நன்கு வளர்ச்சி அடைந்து மக்கள் மத்தியில் பெரியதாக பேசப்பட்டு வந்தன. தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினர். மிகப்பெரிய இயக்குனர்களும் தங்கள் பங்கிற்கு வெப் சீரிஸை இயக்கினர். சினிமாவில் நடித்துவிட்டு வெப் சீரிஸில் நடித்தால் கவுரவ குறைவாக இருக்கும் என எண்ணிய காலம் மாறி, தற்போது அதை கவுரமாக நினைத்து நடிக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல தனியார் இணையதள நிறுவனங்கள் வெப் சீரியஸை தயாரிக்கின்றனர். மேலும் சில நிறுவனங்கள் நல்ல வெப் சீரிஸ் தொடர்களை வாங்கி தங்கள் இணையதள பக்கங்களில் வெளியிடுகின்றன. இதன் மூலம் நல்ல வெப் சீரிஸ் தயாரிக்கும் நபர்களுக்கு வருமானமும் ஏற்படுகிறது. அதிகபட்சம் வெப் சீரிஸ் கள் 30 நாட்கள் அல்லது 50 நாட்களில் எடுத்து முடித்து விடுவதால் இதில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் கால்ஷீட் தரும் நடிகர், நடிகைகளுக்கும் இது வசதியாக உள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் நடிக்கும் வெப் சீரிஸ்  மிகவும் பிரபலமடைந்து அதிக மக்களால் பார்க்கப்படும் வெப் சீரிஸ்  என மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு சில வெப் சீரிஸ் கள் சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்தன. அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் நடிகை நடித்த வெப் சீரிஸ் மிகவும் பிரபலமடைந்தது. இவ்வாறு தொலைக்காட்சிகளில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா, அம்மா ஒருபுறம் இருந்தாலும் வீட்டில் தங்களது அறைக்குள் அமர்ந்து வெப் சீரிஸ்  பார்த்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் தற்போது உருவாக்கி விட்டனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் புதிது புதிதாக வெப் சீரிஸை தயாரிக்க பலரும் முன் வருகின்றனர். வெப் சீரிஸை யார் அதிகமாக பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் பலரும் வெப் சீரிஸை தயார் செய்து வருகின்றனர். சமீபகாலமாக, வன்முறை, காதல், கள்ளக்காதல் போன்ற வெப் சீரிஸ் அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக இல்லீகல் செக்ஸ் எனப்படும் தவறான உறவு முறை உள்ள வெப் சீரிஸ்கள் அதிக அளவில வெளியிடப்படுகின்றன. இதை அதிகமான நபர்கள் தேடி சென்று பார்ப்பதால் தொடர்ந்து அதற்கு வரவேற்பும் உள்ளன. குறிப்பிட்ட ஆபாச காட்சிகள் வைத்தால் யூடியூப் அதனை தடை செய்யும் என்று யூடியூப் சேனல்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில நேரங்களில் வெப் சீரிஸ் எல்லை மீறி பல்வேறு காட்சிகளை வைக்கின்றனர். மேலும் அவர்கள் பேசும் வசனங்கள் வன்மத்தை தூண்டுவதாகவும் காமத்தை தூண்டுவதாகவும் அமைகின்றன. இளைய தலைமுறையினர் பலரும் இதனை விரும்பி பார்ப்பதால் நல்ல வெப் சீரிஸ்க்கு கிடைக்கும் வரவேற்பைவிட தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்க்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகவும் இது வருங்காலத்திற்கு ஏற்புடையது இல்லை எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சினிமாவுக்கு கட்டுப்பாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட வன்முறை அல்லது காமத்தை தாண்டி அவர்கள் படம் எடுக்கும்போது சென்சார் எனும் அமைப்பு அதை தடை செய்யும். ஆனால் இணையதளத்தில் அவ்வாறு கிடையாது. யார் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம், பார்க்கலாம் என்ற வரைமுறை உள்ளதால் தற்போது வெப் சீரிஸ் எனப்படும் வலைத்தொடர்கள் எல்லை மீற ஆரம்பித்துள்ளன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நாடகங்களையோ திரைப்படங்களையோ குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கின்றோம். ஆனால் வெப் சீரிஸ் எனப்படும் வலைத்தொடர்களை பார்க்கும்போது ஹெட் போன் போட்டுக் கொண்டு தனியாக அமர்ந்து பார்க்கின்றனர். அந்த அளவிற்கு அதில் வன்மமும் காமமும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது வெப் சீரியஸில் மூழ்கி வருகின்றனர். க்ரைம் மற்றும் சண்டை காட்சிகள் நிறைந்த பல வெப் சீரியஸை விரும்பி பார்க்கும் சிறுவர்கள் அவ்வப்போது அதில் வரும் லிங்க் எனப்படும் மற்ற வெப் சீரிஸ்  தொடர்களின் விளம்பரங்களைப் பார்க்கும்போது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டு அதன் உள்ளே சென்று பார்க்கின்றனர். ஒரு எபிசோடை பார்த்துவிட்டு நிறுத்திக் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து என முழு எபிசோடையும் பார்க்கின்றனர். வயதுக்கு மீறிய பல தகவல்கள் அதில் உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது செல்போன்களில் எதை தேடுகிறார்கள் என்பதை பெற்றோர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, நாகரிக வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வதில் தவறில்லை என்ற போதிலும் அதில் ஒழுக்கமும் வெளிப்படை தன்மையும் இருந்தால் வருங்கால இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால் நாம் கையில் இருக்கும் செல்போன் நமக்கு கையடக்க கல்லறையாக மாறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை….

The post நல்ல விஷயங்களைவிட எளிதில் மக்களை சென்றடையும் தீய விஷயங்கள் வன்முறை, காதல், காமம் என எல்லை மீறுகிறதா வெப் சீரிஸ்: எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது