×

ஷாப்பிங் மாலாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றம்: பரிதாப நிலையில் தியேட்டர்கள்

ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்து வந்த தொழில்தான், தியேட்டர்கள் தொழில். தமிழகம் முழுவதும் 1150 தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் 300 தியேட்டர்கள் வரை உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு கொரோனா தாக்கத்துக்கு முன்பே மக்கள் வருவது குறைந்துவிட்டது. சனி, ஞாயிறுகளில் மட்டும் ஓரளவுக்கு கூட்டம் கூடும். பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் அதற்கு 3 நாட்கள் ரசிகர்கள் பட்டாளம் கூடும். அதற்கு பிறகு படம் நன்றாக இருப்பதாக ‘மவுத் டாக்’ பரவினால் மட்டுமே தியேட்டரில் கூட்டம் வரும். மற்றபடி ஆண்டுக்கு திரைக்கு வரும் 200 படங்களில் 190 படங்களுக்கு தியேட்டரில் கூட்டம் இருக்காது.

இந்த நிலைதான் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவுக்கு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத பார்வையாளர்களே தியேட்டர்களில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அதில் பாதியளவு பார்வையாளர்கள் கூட தியேட்டர்களுக்கு வரவில்லை. வெறும் 5 சதவீத ரசிகர்களே தியேட்டர்களுக்கு வருகிறார்கள். இதனால் 100க்கும் அதிகமான தியேட்டர்களை மீண்டும் மூடிவிட்டனர். தமிழகம் முழுவதும் இந்த நிலைதான் நீடிக்கிறது.

சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா, மகாராணி ஆகிய தியேட்டர்கள் அடுத்தடுத்து மூடப்பட்டுவிட்டன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அபிராமி, சாந்தி, மேகலா, மெலோடி, கெயிட்டி, பைலட், நாகேஷ், எஸ்எஸ்ஆர் பங்கஜம், கிருஷ்ணவேணி உள்ளிட்ட தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன. இந்த இடங்களில் ஷாப்பிங் மால்களும், திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளும் சில இடங்களில் கட்டப்பட்டு விட்டன. மேலும் ஆல்பர்ட், உட்லாண்ட்ஸ், காஸினோ, தேவி, உதயம், காசி, சரவணா உள்ளிட்ட தியேட்டர்களும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் வருத்தத்துடன் கூறுகின்றன.

இதேபோல் திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், நாகர்கோவில், தர்மபுரி, தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டு, அங்கு திருமண மண்டபங்களும் குடியிருப்புகளும் ஷாப்பிங் மால்களும் கட்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த தியேட்டர்கள் தொழில், இப்போது கொரோனா பாதிப்பு காரணமாக நசிந்து வருகிறது. இதனால் பல தியேட்டர்களும் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஷாப்பிங் மால்களில் மட்டும் சில தியேட்டர்கள் மட்டுமே இருக்கும். சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் தனி தியேட்டர்கள் இருக்காது என திரைப்பட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags : shopping malls ,halls ,wedding ,Theaters ,
× RELATED தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும்...