நடிகர் பிரபுதேவா ரகசிய திருமணம்

நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா, பல படங்களில் ஹீரோவாக நடித்தார். படங்களையும் இயக்கி வருகிறார். தற்போது இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ராதே என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் அவர் ரகசியமாக மறுமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் பிரபு தேவா. அவருக்கு பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் சிகிச்சை அளித்து வந்தார். அவருடன் பிரபு தேவாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் கடந்த செப்டம்பரில் மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் ரமலத் என்பவரை பிரபுதேவா திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன், புற்றுநோய் காரணமாக கடந்த 2008ல் இறந்தார். நடிகை நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ரமலத்தை விவாகரத்து செய்தார். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவை பிரபுதேவா பிரிந்துவிட்டார். இந்நிலையில்தான் அவர் மறுமணம் செய்திருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>