×

‘சிறுதானியம் என்ற சொல் தவறு, சத்துமிகு தானியமே சரி’

நாட்டு ரகங்களை மீட்டெடுக்கும் விதை மனிதர்நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்ப்ப செயல் என்ற வள்ளுவனின் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள அழகிய கிராமத்தில் இருந்து புறப்பட்டுள்ள விவசாயி ஒருவர் நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 15 வருடங்களாக போராடி பல இடங்களுக்கு பயணித்து தற்போது அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.திருச்சி  முசிறி அருகே காவிரி கரையோரமுள்ள  திருநெற்குன்றம் என பழங்காலத்தில் அழைக்கப்பட்டு தற்போது திண்ணகோணம் என்ற பெயரில் இருக்கும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் யோகநாதன். நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி கொண்டதால் தற்போது இப்பகுதியில் இவரை விதை யோகநாதன் என்று கூறினால் தான் எளிதில் அடையாளம் காண முடிகிறது. நாட்டு விதைகளை மீட்டெடுத்து அதனை வியாபாரம் செய்து வெற்றியும் கண்டுள்ள விதை யோகநாதனை நேரில் சந்திக்க பச்சை பசேல் என போர்த்திய வயல்வெளிகளின் ஊடே பயணித்து அவரின் இல்லத்தை அடைந்தோம். கதர் சட்டையும், வேட்டியும்,  பச்சை துண்டுடன் துடிப்பான மனிதராக  காட்சியளித்த யோகநாதன் இன்முகத்துடன் வரவேற்றார்.  ‘‘பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பேக்கரி ஒன்றில் வேலைக்கு போனேன். 2005ல்  நம்மாழ்வாரின் பேச்சை கேட்க நேர்ந்தது. இயல்பாகவே விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட எனக்கு நம்மாழ்வாரின் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரச் சொல்லாகப்பட்டது. நாட்டு விதை அழிக்கப்பட்டு ஹைபிரிட் எனப்படும் விதையில்லா விஷ வித்து தமிழகத்தில் பரவுவதை அறிந்து நெஞ்சம் பதை பதைத்தது. அதிலிருந்து நம்மாழ்வாருடன் பயணிக்க தொடங்கினேன். பேக்கரி கடை வேலை பறிபோனது.இதைறிந்த நம்மாழ்வார் அய்யா ”அப்போ நீ நாட்டு விதைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதை தொழிலாக மாற்றிக்கனு” சொன்னார் . ” பெரிய லாப நோக்கத்துடன் செய்யக்கூடாது, ஹைபிரிட் கம்பெனிக்காரருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது சிறிய அளவிலான வாழ்வியல் தான் இருக்கும்.” என்ற உறுதியையும் என்னிடம் வாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து லாப நோக்கை எதிர்பார்க்காமல் நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினேன். காய்கறி விதைகளில் கத்தரி 10 ரகம், தக்காளியில் மூன்று ரகம், புடலையில் மூன்று ரகம், பாகற்காய் மூன்று ரகம், பீர்க்கன் மூன்று ரகம், கொத்தவரை, பரங்கி, பூசணி என 70 வகை காய்கறிகளின் நாட்டு விதைகளை தரமாக மீட்டெடுத்து அதனை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தேன்.எனது முயற்சியின் தொடர்ச்சியாக பாரம்பரிய நெல் விதைகளில் கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, நவரா, மணிசம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார் உள்ளிட்ட 35 விதமான பாரம்பரிய நெல் விதைகளை உரம் என்னும் விஷ கலப்பு இல்லாமல் மீட்டெடுத்து விவசாயிகளுக்கு வழங்கினேன். மேலும் நாம் தற்போது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கால் வலி, உடலில் போதிய பலமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணமே உணவு முறைதான். மனிதனுக்கு சரிவிகித உணவு அவசியமானது. அதில் 5 வித சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும். இந்த சத்துக்கள் ஒன்றிலிருந்து ஒன்று குறைந்தால் உடலில் நோய் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மனிதனின் உணவில் உடலில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, தாது உப்பு, வைட்டமின் ஆகிய சத்துக்கள் உண்ணும் உணவில் இருக்க வேண்டும். அந்த சத்துக்கள் ஹைபிரிட் விதை மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள், அரிசி, தானியங்கள், கீரைகள் ஆகியவற்றில் கிடையாது.தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான நெல் விதைகளையும், நாட்டு காய்கறி விதைகளையும், பழங்கள் மற்றும் மரக்கன்றுகளின் விதைகளையும் பல மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், அலைந்து சேகரித்து மீட்டெடுத்தேன். அந்த வகையில் நாட்டு ரக  தானிய வகையில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனி வரகு, கம்பு, சிவப்பு சோளம், இருங்கு சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களையும், பயறு வகையில் பாசிப்பயிறு, உளுந்து, கொள்ளு, தட்டை, மொச்சை, நரி பயிறு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளின் நாட்டு விதைகளையும் மீட்டெடுத்துள்ளேன். தானிய வகைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது தானிய வகைகளுக்கு சிறு தானியம் என பெயரிட்டு அழைப்பது தவறு. நமது சிறுதானியத்தை வெள்ளையர்கள் மைனர் மில்லட் என்ற பெயரில் அழைத்தனர். அதனையே தமிழாக்கம் செய்யும்போது சிறு தானியம் என பெயரிட்டு விட்டனர். சிறுதானியம் என்ற பெயர் தவறானது. சத்துமிகு தானியம் என்று அழைப்பதே சரியான பெயராக இருக்க முடியும். இயற்கை உரம் தவிர்த்து, விஷமான உரத்தையும் உப்பையும் வயலில் கொட்டி மண்ணை தரம் இல்லாததாக மாற்றி வைத்துள்ளோம். அதனை சரி செய்யும் விதமாக தற்போது பல பயிர் சாகுபடி என்னும் தொழில்நுட்பத்தை செய்து வருகிறோம். வயலை உழுது பல பயிரை சாகுபடி செய்து அதனை மீண்டும் மக்கும் வகையில் மடக்கி விட்டால், மண்ணின் பழமை குணம் சிறிது சிறிதாக மீண்டு வரும். மலடான மண்ணில் நாட்டு விதைகளை வளர்க்க முடியாது. ஹைபிரிட் என்னும் விஷ விதைகள் மட்டுமே விதைக்க முடியும். கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை விழிப்புணர்வு முகாம்களின் மூலம் இலவசமாக வழங்கியுள்ளேன். விவசாயிகள் ஹைபிரிட் விதையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விளைச்சல் அதிகமாக கிடைக்கலாம். அதே போல நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு மாடியில் பால்கனியில் அவர்களுக்கு தேவையான  காய்கறிகளை விதைக்க வேண்டும்.  விதையில்லா விதையை விதைப்பதன் மூலம் வருங்காலத்தை நாம் மலடாக்குகிறோம் என்பதை உணர வேண்டும். பழமையான நாட்டு விதைகளில் விளைவிக்கப்பட்ட புடலை, வெண்டை, வெள்ளரி, பூசணி, பரங்கி, பீர்க்கன், தக்காளி ஆகியவற்றை உணவில் பயன்படுத்தி பாருங்கள். அதன் ருசியும், மகத்துவமும் தனித்துவமானது.விதைகளை மீட்டெடுக்கும் முயற்சி முடிந்து விடவில்லை. கடல் கடந்து அந்தமான் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விதைகளை மீட்டெடுத்து அதனை உற்பத்தி செய்து மீண்டும் விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறேன். இந்த விதைகளை விற்பதன் மூலம் எனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இரண்டு பேருக்கு சம்பளம் கொடுத்து, ஒரு விதை வியாபார கடையை நடத்தி என் குடும்பத்தை நடத்துகிறேன்.பழமையான நாட்டு விதைகளை உற்பத்தி செய்து கொடுத்து என் சந்ததிகளையும் என் சக மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறேன் என்கிற உணர்வு எனக்கு பெரும் மகிழ்வையும் நிம்மதியையும் தருகிறது’’ என்கிறார். நம்மாழ்வார் எனும் இயற்கை வேளாண் விஞ்ஞானியின் பேச்சினால் ஈர்க்கப்பட்ட கிராமத்து மனிதர் நாட்டு விதைகளை மீட்டெடுத்து பாரம்பரியத்தை காக்க புறப்பட்டு விட்டார். தொடர்புக்கு: யோகநாதன் 94428 16863தொகுப்பு: படங்கள்: ம.வேல்முருகன்

The post ‘சிறுதானியம் என்ற சொல் தவறு, சத்துமிகு தானியமே சரி’ appeared first on Dinakaran.

Tags : Valluvan ,
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...