×

செட்டிபாளையத்தில் தேங்காய் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகள்-விவசாய நிலங்கள் பாதிப்பு

மதுக்கரை : செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகளால் விவசாய நிலங்கள் பாதித்து வருவதாக அந்த பகுதி  விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓராட்டுகுப்பை பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தேங்காய் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.கோவை, பொள்ளாச்சி, காங்கயம், வெள்ளகோவில், புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தேங்காய் தொட்டிகளை டன் கணக்கில் வாங்கி செட்டிபாளையம் பகுதிக்கு கொண்டு வந்து அங்குள்ள தொழிற்சாலைகளில் எரித்து பொடியாக்கி அதை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.அந்த தொட்டிகளை அடுப்பில் போட்டு எரிக்கும்போது அதிகளவில் கரும்புகைகள் உருவாகிறது அந்த புகையினால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மாசுபடுவது மட்டுமின்றி அங்குள்ள கிணற்று நீரும் பாதிப்படைந்து வருகிறது. இந்த பகுதியில் இருக்கும் தென்னை உள்ளிட்ட எந்த பயிர்களை பார்த்தாலும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதனால் இங்குள்ள விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்து வருகிறார்கள்.மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது முறைப்படி அனுமதி பெறாமல் துவங்கப்பட்டவை என்றும், காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனங்கள் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அங்கிருந்த காலி செய்துவிட்டு செட்டிபாளையம் பகுதியில் அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களின் துணையோடு துவங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.அப்போது இந்த தொழிற்சாலைகளுக்கு அதிமுகவினர் ஆதரவாக இருந்தால் அந்த பகுதி விவசாயிகளால் எதிர்த்து போராட முடியவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் வானுகன் கூறுகையில், ‘‘நாங்கள் விசாரித்த வகையில் இங்கு செயல்பட்டு வரும் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகள் அனுமதி பெற்றிருப்பதாக தெரியவில்லை. மேலும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெட்ட வெளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்படும் கரும்புகைகளால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதித்து வருகிறார்கள். இதேநிலை தொடர்ந்தால் தோல் நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் செயல்படுவது உறுதியானால் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு போட வேண்டிய நிலை ஏற்படும்’’ என்று கூறினார்….

The post செட்டிபாளையத்தில் தேங்காய் தொட்டி எரிக்கும் தொழிற்சாலைகள்-விவசாய நிலங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Settiwalayam ,Madakkarai ,Setipalayam ,Settipolayam ,
× RELATED கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர்...