×

நாட்டுக்கோழி, பாக்கு தட்டு தயாரிப்பில் லாபம் ஈட்டும் பழங்குடியின மக்கள்

பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில் நாட்டு கோழி வளர்ப்பு பண்ணை, பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு, வீட்டு தோட்டம் அமைத்தல் மூலம் பழங்குடியினர் மக்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் தாலூகா பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பணியர், குரும்பர், காட்டுநாயக்கன், முள்ளுகுரும்பர், பெட்ட குரும்பர் உள்ளிட்ட பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வனப்பகுதியை சார்ந்து வாழ்ந்து வருவதால் அடிப்படை வசதிகளான நடைபாதை, குடிநீர், மின்சாரம் வசதி, முறையான குடியிருப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாமல் பல கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மேம்பாட்டிற்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்தி வரும் நிலையில் தற்போது படிப்படியாக பழங்குடியினர் மக்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சேரங்கோடு கிராமம் அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் நாச்சேரி பகுதியில் அன்றய மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் 325 காட்டுநாயக்கன் அதிவாசி மக்களுக்காக 4.5 ஹெக்டர் அரசு நிலம் வழங்கப்பட்டு காட்டுநாயக்கன் பழங்குடியினர் மக்களின் வாழ்வதாரம் மேம்படுத்துவதற்கு காய்கறி தோட்டம், நாட்டு கோழிபண்ணை, பாக்கு மட்டை தட்டு, கப் ஆகியவை தயார் செய்து லாபம் ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.இதுகுறித்து காட்டுநாயக்கன் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் கூறுகையில்,‘‘கோழிப்பண்ணை மற்றும் காய்கறி தோட்டம், பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்கும் போன்ற பணிகளில் காட்டு நாயக்கன் மக்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். மீதமுள்ள பணத்தை ஏழை, எளிய மக்களின் மருத்துவம், கல்வி, போன்ற வாழ்வதார முன்னேற்றத்திற்காக செலவு செய்து வருகிறோம். எங்களுக்கு வழிகாட்டிய அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த திட்டம் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது’’ என்றார்.பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் லோகநாதன் கூறுகையில்: பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வி முன்னேற்றத்திற்காக உப்பட்டி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், ஏராளமான பழங்குடியினர் மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். 53 இளைஞர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்துள்ளோம். 125 பழங்குடியினர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். பழங்குடியினர் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்காக 60 பேரை டிஎன்பிசி கோச்சிங் வகுப்பில் சேர்த்துள்ளோம். பாக்கு மட்டையில் தட்டு மற்றும் கப் தயாரிக்கும் இயந்திரம் வசதி செய்து கொடுத்து அதன்மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர். பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறோம்’’ என்றார்….

The post நாட்டுக்கோழி, பாக்கு தட்டு தயாரிப்பில் லாபம் ஈட்டும் பழங்குடியின மக்கள் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Attichal ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து கொண்டு வந்த...