மதுரை: ‘அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம்’ என பாஜகவை தாக்கி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு தலைமை வகித்தார். துணை செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், டிச.5ம் தேதி மாலை அதிமுகவினர் திரளாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக சென்று அஞ்சலி செலுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘அதிமுக முடங்கியுள்ளது என பாஜகவினர் கூறி வருகிறார்கள். பார்ப்பவர்களின் கண்ணோட்டம்தான் அப்படி உள்ளது. எங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக அண்ணன், தம்பியாக இருக்கிறோம். நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டோம். அதிமுக மீது துரும்பை கொண்டு எறிந்தால், நாங்கள் தூணை கொண்டு எறிவோம். அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு முன்னாள் முதல்வரான கருணாநிதியை நாங்கள் வணங்குவோம். அதில் தவறில்லை’ என்றார்….
The post ‘அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம் நம்பாவிட்டால் நட்டாற்றில் விட்டு விடுவோம்’- பாஜகவுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை appeared first on Dinakaran.