×

அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; பிஷப், 50 பாதிரியார் மீது கொலை முயற்சி வழக்கு

திருவனந்தபுரம்: விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து 50 பாதிரியார்கள் மீது சதித் திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம்  சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் அமைக்கும் பணிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு திருவனந்தபுரம் மாவட்ட லத்தீன் கத்தோலிக்க சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சபையை சேர்ந்த பாதிரியார்களும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. துறைமுகத்தை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.  இரு தரப்பினரும் சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விழிஞ்ஞம் போலீசார் திருவனந்தபுரம் மாவட்ட லத்தீன் கத்தோலிக்க சபை பிஷப் தாமஸ் ஜெ. நெட்டோ மற்றும் 50 பாதிரியார்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிஷப் தாமஸ் ஜெ. நெட்டொ மீது சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்ட பாதிரியார் யூஜின் பெரேரா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; பிஷப், 50 பாதிரியார் மீது கொலை முயற்சி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Adani ,bishop ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...