×

வரலாறு படைத்த அருணா மில்லர்!

அமெரிக்காவின் தலைநகரை ஒட்டியிருக்கும் மேரிலேண்ட் மாநிலத்தில் சமீபத்தில், கவர்னர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில்  லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் வெளிநாடு வாழ் இந்தியரான அருணா மில்லர். அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும்  அந்த அருணா மில்லர் யார். அவர் குறித்து அறிவோம்.இளமைப் பருவம்1964 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தவர் அருணா மில்லர். அவரது ஏழு வயதில் தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.  1989 இல், மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன்பிறகு, கலிபோர்னியா, விர்ஜினியா மற்றும் ஹாவாய் பகுதிகளில் போக்குவரத்து இன்ஜினீயராக  பணியாற்றியுள்ளார். பின்னர், 1990-இல் மேரிலேண்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கே, மாண்ட்கோமெரி கவுண்டியில் உள்ள உள்ளூர் போக்குவரத்துத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கே இருக்கும்போதுதான், தனது கல்லூரி நண்பரான டேவிட் மில்லரை  காதலித்து கரம் பிடித்தார்.  அருணா, மில்லர் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள்  உள்ளனர். அரசியல் வாழ்க்கைதிருமணத்திற்கு பின்பு, ஜனநாயகக் கட்சியுடன்  இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிட்ட  அரசியல் களத்துக்கு வந்தார். பிறகு, படிப் படியாக வளர்ந்து  பல பதவிகளை வகித்த அருணாவுக்கு தற்போது 58 வயதாகிறது. தற்போது, துணை கவர்னர் பதவிக்கு போட்டியிடும் முன்பு,  மேரிலேண்ட் ஹவுசின் முன்னாள் பிரதிநிதியாக இருந்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் ஆதரவுடன்,  ஜனநாயகக் கட்சி சார்பில்  கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட வெஸ் மூர் என்பவருடன் இணைந்து லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு அருணா மில்லர் தற்போது போட்டியிட்டார். துணை கவர்னர் பதவிக்குப் போட்டியிட்ட நாளில் இருந்து பலவித சிக்கல்களை  அருணா சந்தித்தார். குறிப்பாக, இந்து தேசியவாதிகளுடன்  அருணா மில்லர் பழகுவதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை அவர் மறுத்து வந்த நிலையில் தான், லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தல் போட்டியில் பல தடைகளைத் தாண்டி, கடைசிநேரத்தில் வெற்றி பெற்றார். அதுபோன்று கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட வெஸ் மூர் வெற்றிபெறவும் அருணா  மிக முக்கியமான காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகள் வெஸ்மூருக்கு கிடைக்க அருணா மில்லர் பாலமாக இருந்துள்ளார் என்று  அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் அருணா மில்லர் மேரிலேன்ட் கவர்னர் ஆகும் வாய்ப்புகளும்  அதிகம் உள்ளன. அதே சமயம், 2018இல் பிரதிநிதிகள் சபை தேர்தலில் இவர் தோல்வி அடைந்த நிலையில் தற்போது துணை கவர்னர் தேர்தலில் வென்றுள்ளார்.  தற்போது நடைபெற்ற, இந்த மேரிலேண்ட் தேர்தலில், அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் அருணா மில்லருக்கு ஆதரவாக இருந்தனர். குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரும் மறைமுகமாக அருணாவுக்கு ஆதரவாக நிதி திரட்டியிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜஸ்தீப் சிங் ஜஸ்ஸி.தற்போது அருணா மில்லர் வென்றிருக்கும் லெப்டினன்ட் கவர்னர் பதவி என்பது, கவர்னர் பதவிக்கு அடுத்தபடியாக, உயர்ந்த பதவியாகும்.  உதாரணமாக, கவர்னருக்கு ஏதேனும் இயலாமை நிலவும்போதோ, அவர் வேறு மாநிலத்தில் இருந்தாலோ அந்தப் பணிகளை லெப்டினன்ட் கவர்னர் மேற்கொள்வார். அதுமட்டுமல்லாமல் கவர்னர் இறந்தாலோ, பதவி விலக நேரிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ இவர் கவர்னராகப் பதவி ஏற்கலாம். இத்தனை உயர்ந்த பதவியை  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணியான அருணா பெற்று இந்தியர்களுக்குப்  பெருமை சேர்த்துள்ளார்.தேர்தலில் வெற்றி  பெற்ற பின் அருணா மில்லர் பேசியது“ஒரு வலிமைமிக்க மாநிலத்தில் ஜனநாயகம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த (8-11-2022) இரவில், மேரிலேண்ட் இந்த நாட்டுக்குக் காட்டியிருக்கிறது. நீங்கள் பிரிவினையைவிட ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தீர்கள். உரிமைகளை கட்டுப்படுத்துவதைவிட உரிமைகளை விரிவுபடுத்துவதையும், பயத்தைவிட நம்பிக்கையையுமே தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களின் அடுத்த கவனராக மூரையும், அடுத்த லெப்டினன்ட் கவர்னராக என்னையும் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நிச்சயம் நாங்கள் உங்களுக்காகப் பணி செய்வோம்” என்றார்.தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post வரலாறு படைத்த அருணா மில்லர்! appeared first on Dinakaran.

Tags : Aruna Miller ,Maryland ,United States ,Dinakaran ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!