×

விளாத்திகுளம் வட்டாரத்தில் பனிப்பொழிவால் பாகற்காய் விளைச்சல் கடும் பாதிப்பு-விவசாயிகள் கவலை

விளாத்திகுளம் : விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை வரை நீடிக்கும் பனிப்பொழிவால் பாகற்காய் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த ஆவணி கடைசியில் வீரிய ஒட்டுரகம் மற்றும் நாட்டு ரக பாகற்காய் விதைகள் நடவு செய்யப்பட்டன. ரூ.650 மதிப்பிலான 260 விதைகள் கொண்ட பாக்கெட்டை கடைகளில் வாங்கி நடவுசெய்தனர். தொடர்ந்து களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல், காய் பறித்தல் என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை  செலவு செய்தனர். ஈரப்பதத்திற்காக நீண்டதொலைவுக்குக்கு நடந்துசென்று தலைச்சுமையாக தண்ணீர் சுமந்துவந்து ஊற்றி பாகற்காய் செடிகளை வளர்த்தனர். விதை முளைத்து செடியாகி 52வது நாளில் இருந்து காய்ப்புக்கு வந்துள்ள பாகற்காய்களை பறிக்கும் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இப்பகுதிகளில் மழை இல்லை. மேலும் பனிப்பொழிவும் அதிகளவில் காலை  வரை நீடிக்கிறது. இதன் காரணாக தற்போது பாகற்காய் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்க்கக்கூடிய பாகற்காய்க்கு இயற்கையாகவே நல்ல சுவை மற்றும் கசப்புத் தன்மை அதிகம் உண்டு. இதனால் இந்த கரிசல் மண்ணில் விளையக்கூடிய பாகற்காய்க்கு சந்தையில் அதிக மவுசும் காணப்படும். தற்போது மழை பெய்வதோடு பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே பாகற்காயின் விளைச்சல் அதிகமாகும். இல்லையெனில் காய்கள் போதிய விளைச்சல் இல்லாமல் பிஞ்சாகவே செடியில் கருகும் நிலைக்கு வந்துவிடும் அபாயம் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில் ‘‘விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பெரும்பாலான பகுதிகளில் பாகற்காய் விவசாயம் ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது சாகுபடியான வீரிய ஒட்டுரக பாகற்காய் கிலோ ரூ.40, நாட்டுரக பாகற்காய் கிலோ ரூ.85 வீதம் விலை போகிறது.கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை இன்றி காலை வரை பனிப்பொழிவு நீடிப்பதோடு அதன் தாக்கமும் அதிக அளவில் உள்ளதால் கொடியில் காய் பிடிக்கவில்லை. மேலும் பாகற்காய் தோட்டக்கலைத்துறையின் பயிர் காப்பீட்டில் இடம்பெறாததால் நிவாரணத்திற்கான பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, தோட்டக்கலை பயிரில் பாகற்காயை சேர்த்து பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். அத்துடன் அதிக அளவில்  விளைச்சல் தரக்கூடிய பாகற்காய் விதை தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க  முன்வர வேண்டும்’’ என்றார்.நோய் நிவாரணிபாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும்  சி அதிகமாக இருப்பதால் கண் பார்வை குறைபாடு மற்றும் சருமம் தொடர்பான  பிரச்னைக்கு பயன்படுகிறது. பாகற்காய் ஜூஸ் தினசரி குடித்தால்  கல்லீரல் தொடர்பாக நோய் நீங்கும். நார்சத்து இருப்பதால் உணவு செரித்தலுக்கு  உதவுகிறது. மேலும் எடை குறைத்தல், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்க்கு  மருந்தாக பயன்படுகிறது….

The post விளாத்திகுளம் வட்டாரத்தில் பனிப்பொழிவால் பாகற்காய் விளைச்சல் கடும் பாதிப்பு-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Vlatikulam region ,Vlathigulam ,Vlathikulam Area—Farmers ,Dinakaran ,
× RELATED விளாத்திகுளம் அருகே விபத்தில் 2 பேர்...