×

தாய்நிலம் தங்களை வரவேற்கிறது?

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. இவர் மலையாளத்தில் பிஸி நடிகர். தந்தை- மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார். இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்திற்கு முதலில்  ‘பயணங்கள் தொடர்கிறது’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால் ‘தாய் நிலம்’ என மாற்றப்பட்டு உள்ளது. டைட்டில் மாற்றம் குறித்து இயக்குநர் அபிலாஷ் கூறும்போது, ‘‘உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம். பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவானபின் அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய் நிலம்தான்.

அப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும் அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் படமாக இது உருவாகி இருப்பதால் இதற்கு ‘தாய் நிலம்’ என்கிற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என தற்போது தலைப்பை மாற்றியுள்ளோம். போர்ச்சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப் படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை.

ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் இருவரும். இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை யதார்த்தமாக சொல்லியுள்ளேன்.

குறிப்பாக பெரும் போராட்டத்திற்கு இடையில் கடலைத் தாண்டி வரும் இவர்களுக்கு இந்த நிலம் எந்த மாதிரியான அனுபவங்களையும் படிப்பினையையும் கொடுக்கிறது என்று சொல்லும் விதமாக கடலுக்கும் அந்த மனிதனுக்கும் ஒரு குழந்தைக்குமான போராட்டமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். அவர்களின் இந்த வலியைப் புரிந்துகொண்ட எல்லோருக்கும் அவர்கள் மீதான மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.

Tags : Motherland ,
× RELATED மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் சிறப்பு பயிலரங்கம்: 13ம் தேதி நடக்கிறது