×

பாரம் - விமர்சனம்

நகரத்திலுள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வாட்ச்மேனாக இருக்கும் கருப்பசாமி, தன் பேத்தியின் பிறந்தநாளுக்காக கிராமத்துக்கு செல்லும்போது, திடீரென்று சாலை விபத்தில் சிக்கி இடும்பு எலும்பு முறிந்து படுக்கையில் விழுகிறார். தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க மகன் செந்திலுக்கு போதிய வருமானம் இல்லை. அரசாங்க செலவில் சிகிச்சை பெற நிறைய இடங்களுக்கு சென்று அலைய வேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆனால், கருப்பசாமியை கவனித்துக்கொள்ள தயாராக இருக்கும் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் ஈகோ இடம் கொடுக்கவில்லை.
எனவே, கிராமத்தில் தனது வீட்டிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தந்தையை வைத்து பராமரிக்கிறார். இறுதியில், துபாய் நாட்டில் வேலைக்கு செல்வதற்கு வசதியாக, தனது தந்தையை விஷ ஊசி போட்டு கொல்கிறார் என்பது கதை. வறுமை மற்றும் அறியாமையின் காரணமாக அந்தக்காலத்து மக்கள் செய்த ஒரு காரியத்தை, இந்தக்காலத்தில் மிகப் பெரிய பாரமாக நினைத்து செய்யும் நவீன தலைமுறையினரை பற்றி பேசியிருக்கிறார், அறிமுக இயக்குனர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

கருப்பசாமியாக ஆர்.ராஜு, மகன் செந்திலாக சு.பா.முத்துக்குமார், மருமகனாக சுகுமார் சண்முகம், செந்தில் மனைவி ஸ்டெல்லாவாக ஸ்டெல்லா கோபி உள்பட அனைவரும் அந்தந்த  கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக, கருப்பசாமியின் தங்கை மென்மொழி வேடத்தில் நடித்துள்ள ஜெயலட்சுமி மற்றும் விஷ ஊசி போட்டு கொல்லும் நந்தினியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. நடிகர்களின் இயல்பான திறமையும், நிஜமான ஒரு நிகழ்வை மறைந்திருந்து படமாக்கியது போன்ற திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளும்தான் படத்துக்கு பெரிய பலம்.

மற்றபடி ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், வேத் நாயரின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி இல்லை. ஆனால், ‘தலைக்கூத்தல்’ என்ற விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்யாமல், விஷ ஊசி விஷயத்தை மட்டும் கதையாக்கி இருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒரு படுகொலை மீடியா வரை விவாதிக்கப்பட்ட பிறகு மிக எளிதாக அதை மறைப்பதில் லாஜிக் இல்லை. தமிழர்கள் என்றால் முதியோரை கொல்பவர்கள் என்ற தவறான கருத்தையும் படம் பரப்புகிறது. முழு படத்தையும் பார்த்து முடித்த பிறகு, ‘இந்த படத்துக்கா தேசிய விருது?’ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

Tags :
× RELATED 1965 மணி நேரம், 163 பேர் உழைப்பில் உருவான அலியா பட் புடவை