×

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் முகமது ஷாரிக் தங்கியிருந்த கோவை லாட்ஜ் மூடல்; போலி பெயரில் தங்கியிருந்தது அம்பலம்

கோவை: கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பயங்கரவாத சதி என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் முகமது ஷாரிக் பயன்படுத்திய சிம்கார்டு கோவையில் வாங்கியது போலீசாருக்கு தெரியவந்தது. ஊட்டியை சேர்ந்த  சுரேந்திரன் (28) என்பவரின் பெயரில் சிம்கார்டு பெறப்பட்டிருந்தது. சுரேந்திரனிடம் ஊட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சுரேந்திரன் கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக இருந்தது தெரியவந்தது. இவர் அடிக்கடி காந்திபுரத்தில் உள்ள குறிப்பிட்ட லாட்ஜுக்கு சென்று மதுபானம் குடித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் சுரேந்திரன் அந்த விடுதியில் தங்கியிருந்த போது பக்கத்து அறையில் அருண்குமார் என்ற பெயரில் முகமது ஷாரிக் 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். பழக்கத்தின் பேரில் தனது ஆதார் கார்டை கொடுத்து, புதிய சிம் கார்டு வாங்க முகமது ஷாரிக்கிற்கு சுரேந்திரன் உதவி செய்துள்ளதும் தெரியவந்தது. அதன் பின்னர் முகமது ஷாரிக் மதுரை, நாகர்கோவிலில் சென்று தங்கியுள்ளார். அவர் தமிழகத்தில் தங்கி இருந்தபோது யாரெல்லாம் சந்தித்தார், என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என கோவை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோவையிலிருந்து தனிப்படை போலீசார் மங்களூர் சென்றனர். அங்ேக முகமது சாரிக்கின் கோவை வருகை, அவரின் சந்திப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மங்களூருக்கு சுரேந்திரனையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் போலீசார் நேற்று கோவை காந்திபுரத்தில் முகமது ஷாரிக் தங்கியிருந்த லாட்ஜில் சோதனை செய்தனர். பதிவேடுகளை ஆய்வு செய்து, தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில், முகமது ஷாரிக் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அருண்குமார் என்ற பெயரில் லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த லாட்ஜில் வெளியூரில் இருந்து அவசர வேலைக்காக கோவை வருபவர்கள் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்து விட்டு உடை மாற்றி செல்வதற்கு வசதியாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே அவர்கள் முறையான ஆவணங்களை பெற்று பதிவு செய்யாமல் அறைகளை ஒதுக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே 3 தளங்கள் கொண்ட அந்த லாட்ஜை போலீசார் பூட்டினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மங்களூரில் இருந்து கோவைக்கு வந்த தனிப்படை போலீசார், முகமது ஷாரிக் தங்கிய பகுதிகளில் விசாரித்தனர். குறிப்பாக சிம்கார்டு விற்ற செல்போன் கடைக்காரர், தங்கும் விடுதி நிர்வாகிகள், விடுதியின் அருகே வசித்தவர்களிடம் விசாரித்தனர். முகமது ஷாரிக், விடுதியில் யாரை சந்தித்தார், யாரிடம் பேசினார் என அறிய செல்போன் கால் லிஸ்ட் பெற முயற்சி எடுத்துள்ளனர். குறிப்பாக அவர் தீட்டிய சதித்திட்டம் தெரிந்து விட கூடாது என்பதற்காக வாட்ஸ் ஆப் காலில் பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் பல தகவல்களை திரட்டுவதற்காக மங்களூர் போலீசார், கோவையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்….

The post மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் முகமது ஷாரிக் தங்கியிருந்த கோவை லாட்ஜ் மூடல்; போலி பெயரில் தங்கியிருந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Mangalore ,cooker blast ,Coimbatore ,Mohammed Shariq ,Ambalam ,Mohammad Shariq ,Mangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு