×

நெல்லை அருகே பயங்கரம் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை 4 பேர் கும்பலுக்கு வலை: பொதுமக்கள் மறியல் பதற்றம்

பேட்டை: நெல்லை மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர், தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் நம்பிராஜன் (29). பேட்டை அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், இட்டேரி அருகே புதுக்குறிச்சியை சேர்ந்த பேச்சியம்மாள் (எ) பேபிக்கும் (24) திருமணம் நடந்தது. தற்போது, பேச்சியம்மாள் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்றிரவு வழக்கம் போல் நம்பிராஜன் வேலைக்கு பைக்கில் சென்றார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. தகவலறிந்து நெல்லை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நம்பிராஜனை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை நடுக்கல்லூரில் ஒரு தரப்பினர் வெகு விமரிசையாக கொண்டாடினர். இது, அந்த ஊரில் மற்றொரு தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. விழாவின் இடையே ஒரு வாலிபர் வீட்டுக்கு சாப்பிட சென்றார். மற்றொரு தரப்பினர் அவரை வழிமறித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து விழா நடத்தும் இளைஞர் குழுவினரிடம் தெரிவித்தார். உடனே தெற்கு தெருவை சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டனர். இந்த முன் விரோதத்தில் நம்பிராஜன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் 4 பேர் கும்பல் தவற விட்ட செல்போனை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் நடுக்கல்லூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் முக்கூடல், பாப்பாக்குடி, பாபநாசம், சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் இருந்து நெல்லைக்கு வரும் பஸ்கள் அனைத்தும் பத்தமடை, மேலப்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்’ என போலீசார் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். நடுக்கல்லூரில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்….

The post நெல்லை அருகே பயங்கரம் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை 4 பேர் கும்பலுக்கு வலை: பொதுமக்கள் மறியல் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Madasamy ,Nimirajan ,Nadalore, South Street ,Chuthamalli District ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...