×

தேவாலா வாழவயல் பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி-சடலத்தை எடுக்க விடாமல் மக்கள் போராட்டம்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சடலத்தை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகம் தேவாலா வாழவயல் பகுதியில் வசித்து வந்தவர் பாப்பாத்தி (70). கூலித் தொழிலாளி. இவர் தனது தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி சுந்தரம்பாள் ஆகியோருடன் ஒரே குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை பாப்பாத்தியின் வீட்டை தாக்கி உடைத்தது. பின்னர் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த பாப்பாத்தியை துதிக்கையால் இழுத்து வெளியே வீசிய யானை, அவரை காலால் மிதித்து கொன்றது. யானையை கண்டதும் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி சுந்தரம்பாள் ஆகியோர் இருட்டில் தட்டுத்தடுமாறி எழுந்து தப்பி ஓடி அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியதால் இருவரும் லேசான காயமடைந்தனர். யானையின் சத்தம் கேட்டு எழுந்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், யானையை சத்தமிட்டு  விரட்டினர்.  சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்ததும் பாப்பாத்தியின் உடலை மீட்க வந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் சடலத்தை எடுக்கக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்துகூடலூர் வனக்கோட்டம் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, கூடலூர் கோட்டாட்சியர் முகமது, கூடலூர் எம்எல்ஏ பொன்ஜெயசீலன், நெல்லியாளம் நகர திமுக செயலாளர் சேகர், கவுன்சிலர் ஆலன் மற்றும்  வனத்துறையினர், தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அட்டகாசம் செய்யும் யானையை உடனடியாக கும்கி யானையை வைத்து பிடிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும்  யானையிடம் இருந்து உரிய  பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களின் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 4 மணி நேரத்திற்கு பின் பாப்பாத்தியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயம் அடைந்த பாப்பாத்தியின் தம்பி ராமலிங்கம் அவரது மனைவி சுந்தரம்மாள் ஆகிய இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று காலை முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கும்கி யானைகளை வரவழைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை கண்காணித்து பிடிக்க உடனடியாக பணியினை  மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை மற்றும் கலெக்டர் ஆகியோரை  கேட்டுக்கொண்டார். யானை வீட்டை உடைத்து  மூதாட்டியை மிதித்து கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post தேவாலா வாழவயல் பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி-சடலத்தை எடுக்க விடாமல் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Devala ,Bandalur ,dewala ,Dinakaran ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்