×

ராஜஸ்தானில் நாசவேலை தண்டவாளத்தில் குண்டு வெடித்தது: என்ஐஏ விசாரணை

உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் ரயில் தண்டவாளத்தில் நடந்த வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. குஜராத்தின் அகமதாபாத் மற்றும் ராஜஸ்தானின் உதய்பூர் இடையே அசர்வா-உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை,  சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த ரயில் நேற்று அகமதாபாத்தில் இருந்து வழக்கம் போல் புறப்பட்டது. இதற்கிடையே, உதய்பூரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கெவ்டா கி நால் அருகே ஒடா பாலத்தில் வெடிவைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர். தண்டவாளம், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடி கொண்டு தகர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த பாலத்தின் அருகே ஜாவர் சுரங்கமும் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. இது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில்: சம்பவம் நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்….

The post ராஜஸ்தானில் நாசவேலை தண்டவாளத்தில் குண்டு வெடித்தது: என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Udaipur ,National Investigation Agency ,Rajasthan ,Gujarat ,Dinakaran ,
× RELATED உதகை – குன்னூர் 23 கி.மீ...