×

விழுப்புரத்தில் திடீர் ஆய்வு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 10,000 குடியிருப்புகள் கட்டப்படும்: வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் புதிதாக 10,000 குடியிருப்புகள் கட்டப்படும் என்று விழுப்புரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தின் 60 இடங்களில் வாடகை குடியிருப்புகள் இதைவிட மோசமான நிலையில் உள்ளன. தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக கட்டிடத்தினை ஆய்வு செய்து சீல் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொள்ளாமல் விரைந்து வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்து யாரும் பாதிக்காத வகையில் பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் தற்போது 60 இடங்களிலும் கட்டிடங்களை முழுமையாக இடிப்பதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் உடனடி வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்பு வீடுகள் அனைத்தும் 100 சதவீதம் முழுமையாக தரத்துடன் கட்டப்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்டிடங்கள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக 60 இடங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள கட்டிடங்கள் அனைத்தும் 1999ம் ஆண்டு கட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள்ளாகவே பழுதடைந்துள்ளதால் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post விழுப்புரத்தில் திடீர் ஆய்வு தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 10,000 குடியிருப்புகள் கட்டப்படும்: வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Vilupupuram ,Tamil Nadu ,Minister ,Muthusamy ,Viluppuram ,Udupupam ,Housing ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...