சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தந்தை தொடங்கும் கட்சிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்றும், எனது பெயரையோ, படத்தையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டார் இதனால் கட்சி தொடங்கும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சி வாபஸ் பெற்றார்.இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ஆதரவாளர்களான விஜய் ரசிகர்கள் சிலருடன் சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையின்போது, கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய்யை சந்தித்ததாகவும், தனக்கு தங்க மோதிரம் பரிசளித்து புதிய கட்சி தொடங்க விஜய் வாழ்த்து சொன்னதாகவும் சந்திரசேகர் கூறியுள்ளார். அதோடு, எஸ்.ஏ.சந்திரசேகர் ‘மக்கள் கட்சி’ என்ற கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டதோடு செயலாளராக முன்னாள் விஜய் மன்ற நிர்வாகி ஜெயசீலனை நியமித்துள்ளார். இதுதவிர 20 மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.ஏ.சி கூறும்போது, ‘மார்கழி மாதம் முடிந்து தை பிறக்கட்டும். எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என்றார். இதுபற்றி விஜய் தரப்பில் கூறியதாவது: விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அவர் (எஸ்.ஏ.சந்திரசேகர்) கட்சி தொடங்க முடியாது. அந்த விஷயத்தில் முன்பிருந்த நிலைப்பாட்டில்தான் விஜய் தொடர்ந்து இருக்கிறார். விஜய்யின் பெயரை புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விஜய் கடந்த சில நாட்களாக சென்னையில் இல்லை. அவரை சந்திரசேகர் சந்தித்ததாக கூறுவது உண்மையல்ல. அவருக்கு தங்க மோதிரமும் அணிவிக்கவில்லை, வாழ்த்தும் சொல்லவில்லை. கடந்த 6 மாதமாக தந்தையின் போன் அழைப்பை ஏற்காதபடி அவரது செல்போன் எண்ணை விஜய் முடக்கி வைத்துள்ளார். இவ்வாறு விஜய் தரப்பில் கூறினர்….
The post தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சிக்கு ஆதரவா? நடிகர் விஜய் தரப்பு பரபரப்பு விளக்கம் appeared first on Dinakaran.
