×

கொரோனா காலத்திலேயே லாபத்தில் இயங்கிய டேன்டீயை வனத்துறைக்கு ஒப்படைக்கக்கூடாது: அரசுக்கு தொழிற்சங்கம் கோரிக்கை

பந்தலூர்: கொரோனா காலத்திலேயே தொழிலாளர்களின் கடுமையான உழைப்பால் லாபத்தில் இயங்கிய டேன்டீயை வனத்துறைக்கு ஒப்படைக்க கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிடபிள்யூசி (எச்எம்எஸ்) தொழிற்சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக கடந்த  1969-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மறுவாழ்வு திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் கழகம் டேன்டீ ஆரம்பிக்கப்பட்டது.இதற்கு தேவையான நிதியை ஒன்றிய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டது. இந்த திட்டம் ஒரு சமூக நலதிட்டமே. லாபத்தின் அடிப்படையில் அல்லது வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இந்த திட்டம் 1975ம் ஆண்டு கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக நிதி உதவி பெறப்பட்டது.தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் காரணமாக 1988-89 ஆண்டில் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டியது, 89-90 ல் ரூ.17 கோடி வருவாய் ஈட்டியது. இதனை அடிப்படையாக அப்போதைய தமிழக முதல்வர்  கருணாநிதி நஷ்டத்தில் இயங்கி வந்த சிங்கோனா தேயிலைத்தோட்டம் 3000 ஹெக்டர் நிலம் மற்றும் அதில் பணியாற்றி வந்த 1800 நிரந்தர தொழிலாளர்கள், 150 ஊழியர்கள் ஆகியோரை 01-04 -1990ம் ஆண்டு டேன்டீயோடு இணைக்கப்பட்டது. இதற்கு டேன்டீ லாபமே முதலீடு செய்யப்பட்டது. 3000 ஹெக்டர் நிலத்திற்கு ஒவ்வொரு வருடமும் ரூ. 3.75 கோடி குத்தகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.1990-95 வரை 1653.50 ஹெக்டர் தேயிலைத்தோட்டமாக மாற்றப்பட்டது. அதே வேளையில் கடந்த 20 வருடங்களாக டேன்டீ தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சட்டப்படியான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர்களை படிப்படியாக குறைக்கப்பட்டு அவர்களை டேன்டீ நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. கடந்த மே மாதம் 530 தொழிலாளர்கள் நிரந்தரம் செய்வதற்கான வேலை நாட்கள் நெருங்கும்போது பணி நிறுத்தப்பட்டது. தற்போது இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.வனத்துறை அமைச்சர் டேன்டீயில் 12000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 3800 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதால் நஷ்டம் அடைகிறது. இதன் காரணமாக டேன்டீக்கு சொந்தமான தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறுவது சரியல்ல. கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் ஓய்வின்றி பணியாற்றினர். அதனால்  2020-21 லாபம் ஈட்டியது தேயிலைத்தூள் சராசரி ரூ.118.10 விலை போனது. டேன்டீ நிறுவனம் 799.55 லட்சம் லாபம் ஈட்டியது. அரசிடம் வாங்கிய கடனுக்கு ரூபாய் 11.88 கோடி வட்டி கட்டியது. ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு 20% வீதம் போனஸ் வழங்க மறுத்துவிட்டது. கொரோனா காலகட்டத்தில் டேன்டீ நிதி நெருக்கடி ஏற்பட்டது என்பது ஏற்புடையதல்ல. அதிமுக அரசு முன்யோசனை இன்றி 270 ஹெக்டர் தேயிலைத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைத்தது. சேரம்பாடியில் ரூ. 15 கோடி  மதிப்புள்ள நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் தயார் செய்கின்ற தேயிலை தொழிற்சாலை அழிக்கப்பட்டது. பழங்குடியினர் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கொளப்பள்ளி தேயிலைக்கோட்டம் மற்ற கோட்டங்களுடன் இணைக்கப்பட்டது. 65 லட்சம் பசுந்தேயிலை அறுவடை செய்த சேரம்பாடி தேயிலைக்கோட்டம் ஒரு பகுதியை வனத்துறையிடம் ஒப்படைத்து மனித-வனவிலங்கு மோதலை ஏற்படுத்தியது முந்தய அதிமுக அரசே அதற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வரும்  எதிர்ப்பு தெரிவித்தார்.வனவிலங்குகள் மனித-மோதலை அடிப்படையாக வைத்து சில பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பது என்பது வனத்துறை அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல. இதனை கைவிட்டு நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு சமூகத்தில் பலவீனம் அடைந்த தொழிலாளர்களை பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கொரோனா காலத்திலேயே லாபத்தில் இயங்கிய டேன்டீயை வனத்துறைக்கு ஒப்படைக்கக்கூடாது: அரசுக்கு தொழிற்சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dandee ,Bandalur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்