×

திருவில்லிபுத்தூர் அருகே மலையடிவார தோப்புகளில் தென்னை மரங்களை காலி செய்யும் காட்டுயானைகள்

◆ இரவு முழுவதும் முகாமிடுவதால் அச்சம்◆ வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கைதிருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கூட்டம், கூட்டமாக வரும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் மலையடிவாரத்தில் உள்ள தோப்புகளில் புகுந்து தென்னை, கொய்யா, தேக்கு மரங்களை சாய்ந்து காலி செய்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இப்பகுதியை திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதி அடர்த்தியான வனப்பகுதியாக இருப்பதால் புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டெருமைகள் என ஏராளமான வனவிலங்குகளும், அரியவகை பறவைகளும் வசித்து வருகின்றன. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் வரும் யானைக் கூட்டங்கள், மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் குடிக்க வருகின்றனர். இவ்வாறு வரும் யானைகள் தோப்புகளில் உள்ள தென்னை, தேக்கு, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு மரங்களை சாய்த்து நாசம் செய்கின்றன.கடந்த ஒருவாரமாக திருவண்ணாமலை பின்புறம் உள்ள வெங்கடேஸ்வராபுரம் பகுதியில் உள்ள தோப்புகளுக்கு மாலை நேரங்களில் வரும் யானைக் கூட்டம், அதிகாலை 3 மணி வரை முகாமிட்டு மரங்களை சாய்த்து நாசப்படுத்துகிறது. திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான தோப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள் தென்னை, தேக்கு, கொய்யா என நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை சாய்த்து நாசம் செய்துள்ளது.இது குறித்து விவசாயி கலைவாணி கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக மாலை 5 மணிக்கே எங்களது தோப்புக்கு காட்டு யானைகள் வந்து விடுகின்றன. இதனால், இரவு நேர காவலாளி தோப்புக்கு வரமறுக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து யானைகள் இறங்கி வருகின்றன. தோப்புகளில் கண்ணில் பட்ட மரங்களை சாய்த்து நாசம் செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எனது தோப்பில் தென்னை, கொய்யா, தேக்கு, மா என 50க்கும் மேற்பட்ட மரங்களை சாய்த்துள்ளன. இதனால், ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகளால் விவசாயம் செய்ய அச்சமாக உள்ளது. எனவே, இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரணம் கேட்டு, திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளேன்’ என்றார்….

The post திருவில்லிபுத்தூர் அருகே மலையடிவார தோப்புகளில் தென்னை மரங்களை காலி செய்யும் காட்டுயானைகள் appeared first on Dinakaran.

Tags : Thiruwilliputtur ,Thiruvilliputtur ,West Continuing mountain ,Dinakaran ,
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...