×

கேரள நம்பூதிரிகளை வைத்து நடத்தப்பட்ட மெகா பூஜை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகரில் தாமரைக்கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் தேய்ந்தே வருவதாக தொண்டர்கள் புலம்புகிறார்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘சமீபத்தில் இந்த கட்சித்தலைவரை கைது செய்ததற்கு போராட்டம் செய்வதாக மாவட்டத்தினர் அறிவித்தனர். ஆனால், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் போராட்டத்திற்கு ஆள் சேரவில்லையாம். யாரையாவது அழைத்தால் காசு தர வேண்டும் என்பதால், நிர்வாகிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்களாம். அறிவித்த நேரத்தைக் கடந்து, மேலும் சில மணிநேரம் கழித்து போராட்டம் நடத்தப்போவதாக நிர்வாகிகள் மீடியாக்களுக்கு மறு அறிவிப்பு செய்தனர். போராட்டத்தை படமெடுக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து, மீண்டும் ஒரு சில மணி நேரம் கடந்து படமெடுக்க சென்றார்கள். அப்போதும் போராட்டத்தை நடத்த கூட்டமில்லாததால், நிர்வாகிகள் தாமதப்படுத்தி வந்தனர். அப்போது கட்சித்தலைவர் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி வெளிவந்தது. இதைக் கேட்டதும், வேறுவழியின்றி, அங்கிருந்த நான்கைந்து பேர் அருகாமையில் இருந்த பேக்கரியில் ஒரு டப்பாவில் லட்டுகளை வாங்கி வந்து அங்கிருந்த சிலருக்கு விநியோகிப்பதாக போட்டோகிராபர்களை வைத்து படமெடுத்துக் கொண்டனர். அங்கு நின்றிருந்த ஓரிரு தொண்டர்களும் இந்தக் கூத்தைப் பார்த்து மனம் வெறுத்துக் கிளம்பிச் சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுவதாக புகார் வருகிறதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர  மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் கீழ் நிலையில் பணியாற்றுபவர்களை  பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு உயர்அதிகாரிகள் செயல்பட்டு  வருகிறார்களாம். இதற்காக அங்கு பணியாற்றிய உதவியாளரை அதிரடியாக  நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கும், நெற்களஞ்சியம் மாவட்டத்தில் பணியாற்றிய  உதவியாளரை கடலோர மாவட்டத்திற்கும் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டதாம்.  இதனால் இந்த இடங்களுக்கு பணியாற்ற வேண்டிய இரண்டு பேரும் தங்களது வீடுகளில்  இருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் மதியம் ஆகிவிடுகிறது. பின்னர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வீடுகளுக்கு செல்வதற்கு மட்டுமே நேரம்  கிடைக்கிறது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கிறதாம். உயரதிகாரிகள்  பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதால் ஊழியர்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்’’என்றார் விக்கியானந்தா. ‘‘கேரள நம்பூதிரிகள் நடத்திய மெகா பூஜை பற்றி சொல்லவும்..’என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பிடித்ததும் சேலத்துக்காரர் யாரும் தன்னை டச் பண்ண முடியாதுன்னு நெனச்சிக்கிட்டிருந்தாராம். ஆனா தேனிக்காரரின் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கையால ரொம்பவுமே மனச்சோர்வு அடைஞ்சிட்டாராம். இந்த நிலையில் தான், கேரள நம்பூதிரிகளை கொண்டுவந்து ஒரு மெகா பூஜையை நடத்தலாமுன்னு அவருக்கு மிகவும் நெருக்கமானவங்க காதுல ஊதுனாங்களாம். இதையடுத்து பவானி கூடுதுறையில இந்த ரகசிய பூஜை நடந்திருக்கு. 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பூஜையில், சில உறுதியை நம்பூதிரிகள் கொடுத்தாங்களாம். ‘‘நீங்க   நெனச்சது நடந்தே தீரும், பொங்கலுக்குள்ள அந்த பதவி உங்களை தேடிவரும். அதை தடுக்க யாராலும் முடியாதுன்னு’ சொன்னாங்களாம். இதனால சேலத்துக்காரர் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகியிட்டாராம். இந்த பூஜை பற்றி அவரது  எதிர்கோஷ்டிகள் பல்வேறு காரணங்களை அடுக்கிக்கிட்டே போறாங்களாம்.  ‘‘மம்மியும், சின்னமம்மியும்  செய்யாத பூஜையா? போயஸ் கார்டன், கொடநாடு,  சிறுதாவூர் பங்களா என அனைத்தும் கேரள நம்பூதிரிகளின் பிடியில் தான்  இருந்தது. எந்நேரமும் பூஜையின் புகையா வரும். ஆனா பாருங்க எந்த பூஜையும்  அவர்களை காப்பாத்தல, கைவிட்டிருச்சி. தான  தருமமே கடைசிவரை  காப்பாத்துமுன்னு சேலத்துக்காரருக்கு அட்வைஸ்  பண்றாங்களாம்’’என்றார்  விக்கியானந்தா. ‘‘காக்கி தகவல் ஏதுமிருக்கா..’’என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா  மாவட்டத்தில் மூன்று ஆறுகள் சந்திக்கும் பகுதியில் பெண் ஆய்வாளர் ஒருவர் பணத்தில் கொழித்துள்ளார். அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தல், பஞ்சாயத்து என கல்லா கட்டியுள்ளார். நேரடியாகவும், பினாமிகள் மூலம் வசூல் வேட்டை நடத்தினாராம். இதுகுறித்து உளவு பார்த்த காக்கி சட்டையினர் மாவட்ட காவல் அதிகாரியிடம் அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த அறிக்கை உண்மை தானா எனவும்  மாவட்ட அதிகாரி ரகசியமாக விசாரணை நடத்தினாராம். அந்த விசாரணையில் அனைத்தும் உண்மை என தெரியவர அதிர்ந்து போனாராம் மாவட்ட அதிகாரி. கை நிறைய ஊதியம் கிடைத்தும் இப்படியா என கோபத்தின் உச்சிக்கு போன நேர்மையான அந்த மாவட்ட காவல் அதிகாரி, இனியும் இவரை அந்த இடத்தில் வைத்தால் சரிப்படாது என்ற  முடிவுக்கு வந்துள்ளார். உடனே மாவட்ட அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய சொல்லி  உத்தரவு பறந்ததாம். தற்போது ஆயுதப்படையில் அந்த பெண் அதிகாரிக்கு டூட்டி  போட்டுள்ளனராம். உப்பை தின்றால் தண்ணி குடித்துத் தானே ஆக வேண்டும்  என்கின்றனர் காக்கி சட்டையினர்’’ என்றார் விக்கியானந்தா. …

The post கேரள நம்பூதிரிகளை வைத்து நடத்தப்பட்ட மெகா பூஜை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mega Puja ,Kerala Namboothiris ,Lotus ,Party ,Dunga ,Uncle ,Peter ,Yananda ,Dinakaran ,
× RELATED விபத்தில் காவலர் பலி: முதல்வர் இரங்கல்