×

மாயமாகும் குன்றுகள் விதிமுறைகள் மீறும் செம்மண் குவாரிகள்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் உள்ளிட்ட மூன்று தாலுகாவில் விதிகளைமுறை மீறி செம்மண் குவாரிகள் செயல்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பதுடன் குன்றுகள் மாயமாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி 50 கிராம மக்களை குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து காக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் பூகோளரீதியாக செம்மண் நிறைந்த குன்றுகள் குறிப்பிட்ட அளவுக்கு இடம்பெற்றுள்ளது. கடலூர் தாலுகாவில் எம்புதூர், எஸ்புதூர், ராமாபுரம், வெள்ளைகரை, வழி சோதனை பாளையம், குமலன்குளம் உள்ளிட்ட கிராமங்களும்,  குறிஞ்சிப்பாடி தாலுகா, பண்ருட்டி தாலுகா பகுதியின் கிராமங்களில் செம்மண் குன்றுகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைந்துள்ளது.செம்மண் மற்றும் கிராவல் தேவையை கருத்தில் கொண்டு சான்றோர்பாளையம், எம்புதூர், எஸ்புதூர், நடுவீரப்பட்டு, சி.என் பாளையம், பண்ருட்டி பகுதியில்  மாம்பட்டு, கீழ் மாம்பட்டு, காடாம்புலியூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் செம்மண் குவாரிகள் செயல்பாட்டில் உள்ளது. இங்கு மூன்று மீட்டர் அளவுக்கு மண் எடுக்கலாம் என சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால் விதிகளை  மீறி பத்து மீட்டருக்கும் மேல் மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்கும் புகார்கள் அனுப்பி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற விதி மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  கடலூர் முதல் பண்ருட்டி வரை 25 கிலோ மீட்டருக்கு பறந்து விரிந்துள்ள செம்மண் குன்றுகள் கபளீகரமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடலூரின் நீராதரமாக உள்ள கேப்பர் மலைகளில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செம்மண் தோண்டப்பட்ட பெரும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக நிலத்தடிக்கு செல்லாமல் நிரம்பி வழிந்தோடுகிறது. இதன்காரணமாக கடலூரின் சுற்றுப்புறப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயமும் இருக்கிறது. சான்றோர் பாளையம், கடலூர் புறநகர், காரைக்காடு பகுதி என பல இடங்களில் விதிமுறை மீறி செம்மண் கிராவல் குவாரிகள் செயல்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குவாரிகளை சுற்றியுள்ள சாலைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலைகள் வீணாகி அடிக்கடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது போன்ற காரணங்களால் கடலூர், குறிஞ்சிப்பாடி,பண்ருட்டி பகுதிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் விதிமுறைகளை மீறி செயல்படும் செம்மண் குவாரிகளை தடை செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.* நவீன முறையில் மணல் திருட்டுசெம்மண்ணில் இருந்து நவீனமான முறையில் மணல் எடுக்கப்பட்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. 10 டிப்பர் லாரி கிராவல் மூலம் 4 டிப்பர் மணல் மற்றும் கூழாங்கல் பிரித்தெடுக்க  பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை செலவிடப்படுகிறது.  இதுபோன்ற கனிமவள முறைகேடு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என பல்வேறு தரப்பிலும் புகார் தெரிவிக்கின்றனர். உரிய அரசு அனுமதி இல்லாமல் நவீன முறையில் மணல் திருட்டு சம்பவங்களுக்காக பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்படுகிறது. * 10 ஆண்டுகளாக நடக்கும் கொள்ளை கடலூர் அருகே எஸ்புதூர், சான்றோர் பாளையம், ராமாபுரம், காரைக்காடு, நடுவீரபட்டு, சிஎன்.பாளையம்  ஆகிய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் அனுமதி இல்லாமல் சுற்றுச்சூழல் முறையான வரைமுறை இல்லாமல் செம்மண் குவாரி செயல்பட்டு வருகிறது. செம்மன் குன்றுகள் கடந்த பத்தாண்டுகளில் பல இடங்களில் மாயமாக மறைந்து விட்டது.அரசின் உரிய அனுமதி இல்லாமல் பல ஆண்டு காலம் நடைபெற்று வரும் இந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திட வேண்டும். இயற்கை வளங்களால் கொள்ளையடிக்கப்பட்ட தொகையை அரசு கைப்பற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். அதேபோல் கடலூர் மற்றும் பண்ருட்டி சுற்றுப்புறப்பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கிய செம்மண் கிராவல் குவாரிகளில்  சில மாதங்களுக்கு முன்  கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் கூடுதல்  குவாரிகள் செயல்பாட்டுக்கு வந்தது. கண் துடைப்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்….

The post மாயமாகும் குன்றுகள் விதிமுறைகள் மீறும் செம்மண் குவாரிகள்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Cuddalore ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...