×

தரமான விளைச்சல் தக்காளி சாகுபடியிலே

‘‘சந்தையில் ஏலம் விடுவதால் நேரடி வருவாய் கிடைக்குது”கோவை தீத்திப்பாளையம் செல்லப்ப கவுண்டன் புதூரை சேர்ந்த விவசாயி குமரேசன் தோட்டம் பட்டி கவுண்டர் தோட்டம் என்றால் அவ்வளவு பிரபலம். தனது 2 ஏக்கர் நிலத்தில் தோட்டக்களை பயிரான தக்காளியை பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டி வருகின்றார். இவர் தோட்டத்தில் கிடைக்கும் தக்காளியை அருகேயுள்ள சந்தைகளில் விற்பனை செய்து இடை தரகர் இல்லாமல் நேரடியாக வருவாய் ஈட்டி வருகிறார். ‘‘தக்காளி 120 நாள் பயிருங்க… செம்மண், வண்டல் மண்ணில் நல்ல விளைச்சலை தரும் கண்ணு’ என பேச்சை துவங்கினார், விவசாயி குமரேசன். தக்காளிக்கு ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர், பிப்ரவரி, செமயான பருவம். மார்ச் மாதமும் சீதோஷ்ண நிலையை பொருத்து பயிர் பண்ணலாம்.  ஏக்கருக்கு 200 கிராம் அளவு விதை போதுமானது. இதன் விதைப்புக்கு நிலத்தை நன்கு உழுது பாத்திகளை உருவாக்க வேண்டும். அதில், தேவையான அளவு தொழுஉரமிட்டு நிரவ வேண்டும். பின்னர், விதைகளை தூவி நீர் பாய்ச்ச வேண்டும். இப்படி செய்தால் 30 நாட்களில் நாற்றுகள் வளர்ந்துவிடும். பின்னர், பாத்தி அமைத்து நீர் பாய்த்து ஒரு அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 35 டன் பழங்கள் அறுவடை செய்ய முடியும். ஊடு பயிராக மிளகாயை போடலாம். நாங்கள் தரமான  நாற்றுகளை வாங்கி நடவு செய்துள்ளோம். நடவு செய்த 50-வது நாள் தக்காளி வந்துவிட்டது. நாற்றை பண்ணையில் இருந்து 70 பைசாவுக்கு வாங்கினோம். ஏக்கருக்கு பத்தாயிரம் நாற்று தேவைப்பட்டது. இதனை ஆட்கள் வைத்து நடவு செய்துள்ளோம்.  தக்காளி பயிரில் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். பயிரில் வேர் முடிச்சு நூற்புழு, நாற்று அழுகல், தக்காளி இலை சுருட்டு வைரஸ், இலை பேன்கள் பாதிப்பு இருக்கும். இதனை கட்டுப்படுத்த தொடர் கண்காணிப்பு ரொம்ப அவசியம். தவிர, இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் இருப்பதால் தக்காளி பயிரை நாசம் செய்கிறது. இதிலிருந்து பாதுகாக்க தினசரி காவல் காக்கின்றோம்.தக்காளி செடிகள் 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டுகள் கொடி போல் வளரும். செடி தரையில் பட்டால் மகசூல் பாதிப்பு மற்றும் செடிக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், செடி தரையில் படாமல் இருக்க வேண்டி குச்சிகள் உதவியுடன் பந்தல் அமைத்துள்ளோம். செடிகள் தரையில் படாமல் இருக்க உதவும். இதனால், மகசூல் அதிகமாக கிடைக்கும். எனவே, நாங்கள் தக்காளி நடவு செய்த 25 முதல் 30வது நாளில் குச்சி வைத்து பந்தல் அமைத்து, கயிறு கட்டி செடியை தரையில் படாமல் பாதுகாத்து வருகிறோம். இப்படி செய்வதால் அதிக விளைச்சல் கிடைக்கிறது. மேலும், தக்காளியை பறிக்க எளிதாக இருக்கும். இந்த வகை தோட்ட பயிர் வளர்ப்பு முறை எளிது தான். ஆனால், விலைக்கு உத்திரவாதம் கிடையாது. மழையால் விலை சரிவு ஏற்படலாம், சில நேரங்களில் விலை உயர்வும் கிடைக்கும். இதற்கு என நிலையான விலை என்பது இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி விதைக்க அச்சப்படுகின்றனர். இருப்பினும், எங்கள் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடக்கிறது. தக்காளி சாகுபடியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை செலவு பிடிக்கும். 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் ரூ.400க்கு குறையாமல் விற்பனையாக வேண்டும். அப்போ தான் லாபம் பார்க்க முடியும். இதற்கு குறைந்தால் நஷ்டம் தான் ஏற்படும். அரசு தக்காளிக்கு நிலையான விலையை அறிவிச்சா நிம்மதியா இருப்போம். அதாவது, ஒரு பிளாஸ்டிக் டிப்பர் தக்காளி ரூ.400க்கு குறையாமல் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். நிலையான விலை இருந்தால் தக்காளி சாகுபடியில் அதிகளவில் விவசாயிகளே வருவாய் ஈட்ட முடியும். ஏக்கருக்கு ஆயிரம் டிப்பர் வர வேண்டும். ஆனால், அவ்வளவு வருவதில்லை. மழைக்காலத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. செடி நடவு செய்தது முதல் அறுவடை வரை பூச்சி விரட்டி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தரமான காய்கள் கிடைக்கும். இல்லையென்றால், 20 சதவீதம் தக்காளி வீணாகி போகும். நாங்கள் அறுவடை செய்யும் தக்காளியை நேரடியாக சந்தையில் ஏலத்திற்கு கொடுத்தும், விற்பனை செய்தும் வருகிறோம். இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கின்றது” என்கிறார்.தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிர்அமெரிக்காவிலுள்ள பெரு என்ற நாட்டில் இந்தப் பயிர் தோன்றியது. அங்கிருந்து பிற கண்டங்களுக்கு தக்காளி பயிர் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றளவும் தக்காளி உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டில், தக்காளியின் உலக உற்பத்தி 187 மில்லியன் டன்களாக இருந்தது. இந்தியாவில் மட்டும் உற்பத்தியான மொத்த தக்காளியின் அளவு  20 மில்லியன் டன் ஆகும்.இந்தியாவில் விளைகிற தக்காளி இனங்கள் மணித்தக்காளி, பேத்தக்காளி ஆகும் . தென்னிந்தியாவில் அதிகளவு தக்காளி பயிரிடப்படுகிறது.  நன்கு பழுத்த பழங்கள் நாம் அன்றாடம் செய்யும் சமையலில் ரசம் போன்ற உணவு வகைகளில் பயன்படுவதுடன் சூப், சாஸ், ஜாம், கெட்சப் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுகிறது. தொடர்புக்கு: குமரேசன்- 98429 60699தொகுப்பு:சதீஷ்குமார்  படங்கள்: சதீஷ் தனபாலன்

The post தரமான விளைச்சல் தக்காளி சாகுபடியிலே appeared first on Dinakaran.

Tags : Goa Farmer Kumaresan ,Batti ,Puduorai ,Dinakaran ,
× RELATED 90 கிராமங்கள் பயனடையும் வகையில் ₹4 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம்