×

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் பாஜவினரிடம் பணம் வாங்கி டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்-ஆளும் கட்சி செயல் தலைவர் சூறாவளி பிரசாரம்

திருமலை : தெலங்கானாவில் நடைபெற்ற சூறாவளி பிரசாரத்தில் பாஜவினரிடம் பணம் பெற்று டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஆளும் கட்சி செயல் தலைவர் பேசினார்.தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதனால் தற்போது இடைதேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில்   குசுகுந்த்லா பிரபாகர்ரெட்டியும், பாஜவில் கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பால்வி ஸ்ரவந்தி போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில் 3 முக்கிய கட்சிகள் போட்டியில் இருந்தாலும் டிஆர்எஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்வர்  சந்திரசேகர ராவ் தனது  டிஆர்எஸ் கட்சியை தேசியளவில் கொண்டு செல்ல பிஆர்எஸ் பாரத் ராஷ்டிரிய சமிதி  என தனது கட்சி பெயரை மாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த முனுகோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமாக மாறியுள்ளது. அடுத்தாண்டு நடைபெற கூடிய தேர்தலில் இந்த தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் பாஜ துப்பாக்கா, ஹூசூராபாத் இடைதேர்தலிலும்,  ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற இந்த முனுகோடு தேர்தல் வெற்றி மிகவும் அவசியம் என பாஜ எதிர்பார்க்கிறது.இதற்காக பல கோடி பணம் செலவு செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் ஒருபாகமாகவே டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களை ₹400 கோடிக்கு விலைக்கு வாங்க பேரம் பேசிய விவகாரத்தில், ஆளும்  டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜ சார்பில் பேரம் பேச வந்த 3 பேரை பண்ணை வீட்டிற்கு வரவழைத்து  போலீசில் சிக்க வைத்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாஜ வேட்பாளர் கோமட்டிரெட்டி ராஜகோபாலரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து ₹5.30 கோடி தேர்தல் நடைபெற உள்ள முனுகோடு தொகுதிக்கு உட்பட்ட பாஜ நிர்வாகிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக டிஆர்எஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், தேர்தல் ஆணையமும் பாஜ வேட்பாளருக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் முனுகோடு தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக ஒரு ஓட்டுக்கு ₹30 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.இடைத்தேர்தலில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டிக்கு ஆதரவாக நேற்று நாராயணபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் பேசியதாவது: இடைத்தேர்தல் ஆளும் எம்எல்ஏ இறந்தால் வரும். ஆனால், முனுகோடு இடைத்தேர்தல் வர காரணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி மோடியின் காலை பிடித்து கொண்டு ₹1,800 கோடிக்கு காண்ட்ராக்ட் ஒன்றிய அரசிடம் இருந்து  பெற்றதற்காக தான் பதவி வகித்த கட்சியில் இருந்து  விலகி ராஜினாமா செய்து பாஜவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது.மோடி ஜன் தன் வங்கி கணக்கில் ₹15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால், யாருக்கும் வரவில்லை. முனுகோடு தொகுதிகளுக்கான மக்கள் பணத்தை ராஜகோபால் ரெட்டிக்கு மோடி செலுத்தியுள்ளார். எனவே, தேர்தலில் வெற்றி பெற பாஜ சார்பில்  1 கிலோ தங்கம் கொடுத்தாலும், சத்தியம் வைக்க சொன்னாலும் சத்தியம் வைத்து எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், தொகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால் டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இதுவரை ₹2.95 கோடி பறிமுதல்தேர்தலில் பணப்பட்டுவாடா தடுப்பதற்காக முனுகோடு தொகுதி சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சோதனைச்சாவடி அமைத்து சிஐஎஸ்எப் வீரர்களுடம் இணைந்து  போலீசாரும் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகள் நடைமுறை வந்ததிலிருந்து இதுவரை ₹2.95 கோடி வரை ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வாக்காளர்களை கவர்வதற்காக தொடர்ந்து பண விநியோகம், மது, மாமிசம் என வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன….

The post தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் பாஜவினரிடம் பணம் வாங்கி டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்-ஆளும் கட்சி செயல் தலைவர் சூறாவளி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,BJP ,TRS party ,Tirumala ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...