×

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க மானியம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்காக, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ்  விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதிசெய்வதிலும் அதிகளவு பங்குவகிக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.நடப்பு ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள்:காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட பலவகையான தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம், உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், சுவை தாளித பயிர் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியீடு:தோட்டக்கலை மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம், 2022-23 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட இனங்களை செயல்படுத்துவதற்கு ரூ.170.79 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு செயல்திட்ட அறிக்கையினை தயாரித்து, அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அரசாணை வேளாண் உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் நோக்கம்:தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை பின்பற்றி, தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, தமிழக மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தோட்டக்கலை பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எவ்வளவு மானியம்? இத்திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெற்று, சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40 சதவிகித மானியம் வழங்குகிறது. பயிர் வாரியான விபரம் பின்வருமாறு.

காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்: கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.50,000 செலவாகும். இதில், ரூ.20,000/- மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுக்களும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படும். பழப்பயிர்கள் சாகுபடிக்கு மானியம்: அடர் நடவு முறையில் மா சாகுபடியினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.9,800/- மானியத்தில் ஒட்டு மாஞ்செடிகளும், கொய்யா சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.17,600/- மானியத்தில் கொய்யா பதியன்களும், இடுபொருட்களும், திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடி மேற்கொள்ள, எக்டருக்கு ரூ.37,500/- மானியத்தில் திசு வாழைக்கன்றுகளும், இடுபொருட்களும், பப்பாளி சாகுபடியை அதிகரிக்க,  எக்டருக்கு ரூ.23,100/- மானியத்தில் பப்பாளிக் கன்றுகளும், இடுபொருட்களும், எலுமிச்சை சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.13,200/- மானியத்தில் எலுமிச்சைக் கன்றுகளும், இடுபொருட்களும், அத்தி சாகுபடியை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.20,300/- மானியத்தில் அத்தி நாற்றுக்களும், இடுபொருட்களும், வெண்ணைய் பழம், நெல்லி, பலா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு  எக்டருக்கு ரூ.14,400/- மானியத்தில் நடவுச் செடிகளும், இடுபொருட்களும் வழங்கப்படும். தரமான கன்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.  மேலும், டிராகன் பழ சாகுபடிக்கு பந்தல் அமைக்கவும், நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களுக்காகவும் எக்டருக்கு ரூ.96,000/-ம்,  அன்னாசி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.26,300/-ம், ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.1,12,000/-ம் நடவுக்குப் பின், கள ஆய்வு மேற்கொண்டு,  பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். பழப் பயிர்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு நான்கு எக்டர் வரை மானியம் வழங்கப்படும். மலர்கள் சாகுபடிக்கு மானியம்: உதிரி மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.16,000/- மதிப்பிலான  மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப்பின் வயல்களை கள ஆய்வு செய்து பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ.60,000/-ம், கொய்மலர்கள் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ40,000/-ம் மானியமாக வழங்கப்படுகிறது. மலர்கள் சாகுபடியில் அதிகபட்சமாக ஒரு விவசாயி  இரண்டு எக்டர் வரை மானியம் பெறலாம்.சுவைதாளிதப் பயிர்களுக்கு மானியம்: விதை மூலம் சாகுபடி செய்யப்படும் சுவைதாளிதப் பயிர்களுக்கு எக்டருக்கு  ரூ.12,000/- மதிப்பில் குழித்தட்டு நாற்றுகளும், இடுபொருட்களும், கிழங்கு வகை சுவைதாளிதப் பயிர்களுக்கு,  நடவு செய்த பின்னர் வயல்களை கள ஆய்வு செய்து எக்டருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.12,000/-ம், பல்லாண்டு சுவைதாளிதப் பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.20,000/- மதிப்பில் நடவுப் பொருட்களும் இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படும். கோக்கோ, முந்திரி சாகுபடிக்கான மானியம்: கோக்கோ, முந்திரி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.12,000/- மானியத்தில் நடவுப்பொருட்களும், இடுபொருட்களும் விநியோகம் செய்யப்படும்.இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கான தகுதிகள்:சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.என்னென்ன ஆவணங்கள் தேவை? பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி 25,680 எக்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புடன், கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.…

The post தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க மானியம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M.R.K. Panneerselvam ,Chennai ,MRK Panneerselvam ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...