×

மீன்பிடி விதிகளை பின்பற்றாத விசைப்படகுகள்: மீன்வளத்துறை எச்சரிக்கை

ராமநாதபுரம்:  பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் விதிகளை பின்பற்றாத படகுகளுக்கு கால அவகாசம் விதித்து மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு, தென் கடற்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்று வருகின்றன. தொழிலுக்கு செல்லும் படகுகளுக்கு 1983ம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய சட்டப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரையோர மீன்பிடியில் விசைப்படகுகள் ஈடுபடக்கூடாது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. அடையாள அட்டை இல்லாத மீனவரை தொழிலுக்கு அழைத்து செல்லக்கூடாது. படகு உரிமம் பெறும்போது தெரிவிக்கப்பட்ட படகின் நீளம், அகலங்களை மாற்றக்கூடாது. சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடக் கூடாது. இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகளை மீன்வளத் துறையினர் அடிக்கடி சோதனை செய்து முறையற்ற மீன்பிடி மூலம் பிடித்து வரும் மீன்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்ட படகுகளின் உரிமையாளருக்கு அபராதம், அனுமதி சீட்டு ரத்து உள்ளிட்ட சட்ட  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அக்.28ல் நடந்த மீனவர் குறைதீர்நாள் கூட்டத்தில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தொழிலுக்கு செல்லும் மண்டபம் விசைப்படகுகளில் பெரும்பாலாவைகளில் பதிவெண் முழுமையாக எழுதாமலும், மிதவை உள்ளிட்ட உயிர் காப்பு சாதனங்கள் இல்லாமலும் தொழிலுக்கு செல்வதாக புகார்கள் எழுந்தன. விசைப்படகு மீன்பிடி முறை மீது குற்றம்சாட்டியும், மீன்வளத்துறை மீது வீண் பழி சுமத்தும் ஒரு சில மீனவ சங்கங்களை மீனவர் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் வடக்கு, தெற்கு, மண்டபம், ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மண்டபம் வடக்கு, தென் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள 552  விசைப்படகுகளில்   உயிர்காப்பு மிதவைகளை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். திடீர் ரோந்து  மேற்கொள்ளும்போது உயிர்காப்பு மிதவைகள் இல்லாத படகுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்டபம் தென் கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி இல்லாத நாட்களில் ஒரு சில விசைப்படகுகள் அனுமதிச்சீட்டு இன்றி, தொழிலுக்கு  செல்லும் படகுகள் மீது 1983ம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவெண்களை அழித்து, மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறி தொழிலுக்கு செல்லும்  விசைப்படகுகள் தங்கள் படகுகளின் பதிவெண்ணை அங்கீகரித்த அளவில் தடித்த எழுத்துகளில் படகுகளில் எழுதி கொள்ள வேண்டும். பதிவெண் எழுதப்படாத படகுகள் ரோந்து பணியின் பிடிபட்டால், இத்தகைய படகுகள் சட்ட விரோத மீன்பிடி படகுகளாக கருதப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு மானிய டீசல் விநியோகம் நிறுத்தப்படும்.  மீன்பிடி ஒழுங்கு நடவடிக்கைகளை பின்பற்றாத படகுகள் நவ.3ம் தேதிக்குள்   சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மீன்வளத்துறையினர் நடுக்கடலில்  சமீபத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டறிந்தனர். ராமேஸ்வரம் கடலில் இரு முறை நடத்திய திடீர் சோதனையில் 40 படகுகள், பாம்பன் கடலில் நடத்திய சோதனையில் 31 படகுகள் பிடிபட்டன.  இப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்தனர். படகுகளின்  உருவ மாற்றம், சிதைக்கப்பட்ட  படகின் பதிவெண்ணில் புதிய படகு அமைத்தல் பலகைகளுக்கு பதிலாக பைபர், ஸ்டீல் உள்ளிட்ட காரணங்களுக்காக மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் ரத்து என நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மீன்பிடி விதிகளை பின்பற்றாத விசைப்படகுகள்: மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Bagjalasandi ,Gulf of Mannar ,
× RELATED நாளையுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்