×

‘ஓ பட்டர்பிளை…. சிறுமலையில் விரித்தாய் சிறகை…’ 129 வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு: கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர் தகவல்

திண்டுக்கல்: சிறுமலை வனப்பகுதியில் நடத்திய கணக்கெடுப்பில் 129 வண்ணத்துப் பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மண்டலத்தின் தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின்படி, சிறுமலை வனப்பகுதியில் வண்ணத்துப் பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்) கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங்கிணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியது. கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1,600 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளன. சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன், ஐடிபி-2 வனச்சரக அலுவலர் சிவா மற்றும் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்புடன் இணைந்து கணக்கெடுப்பை நடத்தினர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி, புதியதாக 129 இன வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டன. இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கியத்தன்மையைக் காட்டுகிறது. இங்கு கண்டறியப்பட்ட இனங்கள்  ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் வண்ணத்துப் பூச்சிகள் (36), ப்ளூஸ் (39) மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22) என்ற 5 வண்ணத்துப் பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பழநி மலைகளுக்குச் சொந்தமானதாக அறியப்படும் நிம்ஃபாலிடே இனத்தைச் சேர்ந்த பழநி புஸ் ப்ரவுன் இனத்தைப் பார்ப்பது இந்த ஆய்வின் சிறப்பம்சங்களில் அடங்கும். இந்த இனம் சிறுமலையின் உயரமான பகுதிகளில் நன்கு காணப்படுகிறது. மேலும், தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் வண்ணத்துப் பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல எதிர்காலத்தில் பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு தெரிவித்துள்ளார்….

The post ‘ஓ பட்டர்பிளை…. சிறுமலையில் விரித்தாய் சிறகை…’ 129 வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு: கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sirumalai ,District Forest Officer ,Prabhu ,Forest ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று...