×

உல்லனில் உள்ளங்களைக் கவரும் ஸ்ஹரி!

மிசௌரியைச் சேர்ந்த ஸ்ஹரி தனது தனித்துவமான உல்லன் பொம்மை களால் உலக அளவில் ரசிகர்களையும், கஸ்டமர்களையும் சம்பாதித்து வருகிறார். மேலும் இவரின் பொம்மைகளும் பல்லாயிரங்களில் விற்பனையாவதுதான் சிறப்புத் தகவல். அப்படி என்ன சிறப்பு உல்லன் பொம்மைகள். ‘ஆதிகாலம் முதலே பெண்களின் கைவினை வேலைப்பாடுகளில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று உல்லன் நூலில் ஸ்வெட்டர்கள், பொம்மைகள், கவர்கள், சாக்ஸ், குழந்தைகளுக்கு கிளவுஸ் இவைகள் எல்லாம் பின்னுவது. மேலும் மகப்பேறு காலத்தில் உண்டாகும் பிரீ டெலிவரி புளூஸ், டெலிவரி பயம், கர்ப்பகால டென்ஷன்களுக்கு அக்காலம் முதல் இக்காலம் வரையிலும் அரிய மருந்தும் இந்த உல்லன் கைவினை வேலைகள்தான். அவசர யுகம், பெருகிவிட்ட டிவி, மொபைல் காலம் இந்த உல்லன் பின்னும் முறைகளும் குறையத் துவங்கிவிட்டன. ஆனால் மிசௌரியைச் சேர்ந்த ஸ்ஹரி என்னும் பெண் தன் கர்ப்பகாலத்தில் பெரும்பாலான பெண்கள் போலவே உல்லன் நூலில் பொம்மைகள், ஸ்வெட்டர்கள் எனப் பின்னத் துவங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் டெலிவரி, அதனால் உண்டான இரத்தப் போக்கு, குழந்தைகள் நலம் என அனைத்தையும் தன் உல்லன் பின்னும் திறனைக்கொண்டு உருவாக்கியிருக்கிறார். 2020 ஊரடங்கு காலத்தில் துவங்கிய இந்த தனித்துவமான மகப்பேறு பொம்மைகளை தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட வீடியோ சுமார் மில்லியன்களில் சென்றிருக்கிறது’.‘வீடியோ பார்த்துட்டு நிறைய பேர் தங்களுக்கும் இம்மாதிரியான பொம்மைகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க’ எனத் தனது பிஸினஸ் வளர்ந்த விதத்தைப் பகிர்ந்தார் ஸ்ஹரி. ’ஆரம்பத்தில் நான் செய்த அதே பொம்மைகளுக்கு ஆர்டர்கள் வந்தது. பின்னர் அவர்களே தங்களைப் போன்ற தங்கள் குழந்தைகள் போன்ற பொம்மைகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க. சிலர் அவங்க புகைப்படங்கள் அனுப்பி ஸ்கின் கலர், ஹேர்ஸ்டைல், உடைகள் கூட இப்படி வேணும்னு கேட்க ஆரம்பிச்சு இன்னைக்கு உலக அளவில் பிஸினஸ் செய்துட்டு இருக்கேன். என்னும் ஸ்ஹரி சில குறிப்பிட்ட நெகிழ்வான கஸ்டமர்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். ‘ஒரு பெண் தனக்குப் பிறந்த குழந்தை பார்வையில்லாமல் இருப்பதாவும் அந்தக் குழந்தைக்கு விளக்குகிற விதமா வாய்ஸ் நோட்டுடனும் பொம்மைகள் கேட்டாங்க. இன்னொரு பெண் இரண்டு விரல்கள் இல்லாமல், ஒரு கால் பிரச்னைக் கொண்ட குழந்தை, டாட்டூ போடப்பட்ட தன் கைகள் இப்படிக் கூட தனித்துவமா கேட்டு பொம்மைகள் வாங்கறாங்க. பார்வையில்லாத குழந்தையின் அம்மாவுக்கு நான் ரெண்டு பொம்மைகள் செய்தேன். ஒண்ணு எனக்கு இன்னொன்னு அவங்களுக்கு. என்னால மறக்கவே முடியாத கஸ்டமர் அவங்க’ என நெகிழும் ஸ்ஹரியின் மற்ற தேவதைக் குழந்தைகள், றெக்கை முளைத்த பாப்பாக்கள், பால் புட்டியுடன் கூடிய பேபிகள், துணியில் சுற்றி வைக்கக்கூடிய பிறந்த குழந்தைகள் என பல பொம்மைகளும் விற்பனையில் மாஸ் காட்டுகின்றன. இதற்கிடையே பளிச்சென தென்படுகிறது அந்த கர்ப்பமான பெண் பொம்மைகளும் அவைகளின் வயிற்றினுள் இருக்கும் குழந்தைகள் பொம்மைகளும்தான். குழந்தைப்பேறின் போது எப்படி பிறப்புறுப்பில் இருந்து குழந்தைகள் தொப்புள்கொடி சகிதமாக வெளியே எடுப்பார்களோ அதே பாணியில் எடுக்கும்படி உல்லனில் பின்னுகிறார் ஸ்ஹரி. இந்த சிறப்பு பொம்மைகளுக்கு எதிர்ப்புகளும் வருவதாகச் சொல்லும் ஸ்ஹரி ‘நான் என் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த கதையை எப்படிச் சொல்ல நினைத்தேனோ, அதையேதான் மற்றவர்களுக்கும் பொம்மைகளாக அனுப்புகிறேன்’ எனத் தெளிவாகச் சொல்கிறார் இந்த உல்லன் கவர் ஸ்ஹரி. தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

The post உல்லனில் உள்ளங்களைக் கவரும் ஸ்ஹரி! appeared first on Dinakaran.

Tags : Shari ,Ullan ,Missouri ,
× RELATED மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மிசோரம் முதல்வர் எதிர்ப்பு