×

மயிலை கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரத்தில் டிவிஎஸ் குழும தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்காக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பாக டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக கூறி, திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மயிலின் அலகில்  மலர் இருந்த புராதன சிலை 2014ம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவின் போது மாற்றப்பட்டு, அலகில் பாம்பு உள்ள மயில் சிலை வைக்கப்பட்டதாகவும், இது ஆகம விதிகளுக்கு முரணானது, திருப்பணி குழுவினரின் மீது கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும் தகவல் வெளியிட்டு வந்தார்.இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கோயில்களின் ஆகமம் குறித்து ஆய்வு செய்யும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவே, மயிலின் அலகில் இருந்தது மலரா, பாம்பா என்பதை முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர்கள் என எந்த தரப்பும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறியதாக  கபாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா குழுவில் இடம் பெற்றிருந்தவரும், டிவிஎஸ் குழும தலைவருமான தொழிலதிபர் வேணு சீனிவாசன் தரப்பில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேணு சீனிவாசன் தரப்பில் நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளத்தில் அவதூறு வார்த்தைகளால் ரங்கராஜன் நரசிம்மன் கருத்துகளை பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளத்தில் வேணு சீனிவாசனுக்கு எதிராக பதிவிட்ட கருத்துகளை நீக்குவதாக உறுதி அளித்ததோடு தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வேணு சீனிவாசன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்….

The post மயிலை கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரத்தில் டிவிஎஸ் குழும தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : TVS Group ,Peacock Kapaleeswarar ,Chennai ,Madras High Court ,Rangarajan Narasimhan ,Srirangam ,Mailai ,Kapaleeswarar Temple ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...