×

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ400 கோடி பேரம் பேசிய பாஜ ஆதரவாளர்கள் கைது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ400 கோடிக்கு பாஜ சார்பில் பேரம் பேசிய விவகாரத்தில் சிக்கிய 3 பேர், உயர் நீதிமன்ற உத்தரவால் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த வாரம் சந்தித்தனர். இந்த பண்ணை வீட்டில் ஆளும் கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ100 கோடி வீதம் ரூ400 கோடி வழங்குவதற்காக டெல்லியை சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்த கிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் பாஜ சார்பில் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ராமச்சந்திர பாரதி, சிம்மயாஜிலு ஆகியோர் சாமியார்கள். நந்தகிஷோர் இடைத்தரகர். இதில் பேரம் பேச வந்தவர்களிடம் இருந்து ரூ15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பாக, பண்ணை வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி, சுவாமி ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிைலயில், இந்த ஆடியோ வெளியான விவகாரம் குறித்து பாஜ எம்எல்ஏ ரகுநந்த ன்ராவ் அமலாக்கத்துறையிடம் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பொதுமக்கள் மத்தியில் பாஜ அரசின் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே ஆளும் டிஆர்எஸ் கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. ரூ400 கோடிக்கு பேரம் பேசியதாகவும், ரூ15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பணம் எங்கே?, உரையாடல் பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கே? அவற்றை ஏன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ2 லட்சம் எடுத்தாலே உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போதும் ரூ15 கோடி எப்படி பரிமாற்றம் நடந்தது? பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பேரம் பேசியவர்களிடம் கொடுத்தது யார்? அந்த பணம் கருப்பு பணமா? அல்லது வெள்ளை பணமா? என்பது குறித்து அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.இதற்கிடையே, சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட அரசியல் இடைத்தரகர் நந்தகுமார், டெல்லியை சேர்ந்த ராமச்சந்திரபாரதி,  திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் ஐதராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் பணம் கையகப்படுத்தாததால் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தெலங்கானா போலீசார் நேற்று முன்தினம், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் நேற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேரம் பேசியதை, ஆடியோ ஆதாரங்களுடன் போலீசார்  தெரிவித்தனர். மேலும், இவ்வழக்கில் 3 பேரையும் வெளியே விட்டால் சாட்சி, ஆதாரங்களை கலைக்க கூடும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி பணம் பறிமுதல் செய்யவில்லை என்றாலும், பேரம் பேசியது உண்மை என்பதால் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று 3 பேரையும் சைபராபாத் போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.பாஜ தலைவர் கோயிலில் சத்தியம்ரூ400 கோடி விவகாரம் தொடர்பாக பாஜ தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் நேற்று முன்தினம் யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்று தனது தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, ‘பேரம் பேசியதற்கும், பாஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ எனக்கூறி சத்தியம் செய்தார். மேலும், சுவாமி முன்பு நின்றபடியும் சத்தியம் செய்தார். அதேபோல் ‘முதல்வர் சந்திரசேகர ராவ் கோயிலுக்கு வந்து பேரம் பேசியது குறித்து சத்தியம் செய்ய வேண்டும்’ என்றார்.இந்நிலையில், இதற்கு டிஆர்எஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ‘எம்எல்ஏக்களை இழுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான். எனவே, பண்டிசஞ்சய்க்கு பதிலாக மோடியும், அமித்ஷாவும் ேகாயிலில் வந்து சத்தியம் செய்யட்டும்’ என தெரிவித்துள்ளனர்.பாஜவால் எம்எல்ஏ உயிருக்கு ஆபத்துஐதராபாத் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் சந்திப்பு நடைபெற்றது தொடர்பாக, வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இதனால், அவரது உயிருக்கு பாஜவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, துப்பாக்கி ஏந்தியபடி 4 போலீசார் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.சத்தியம் செய்வதால் உண்மை பொய் ஆகாதுதெலங்கானா மாநில தகவல் தொடர்பு துறை அமைச்சரும், முதல்வர் சந்திர சேகரராவின் மகனுமான கே.பி.ராமாராவ் கூறுகையில், ‘கோயிலுக்கு சென்று சத்தியம் செய்வதால் உண்மை பொய் ஆகாது. பொய் உண்மை ஆகாது. இப்படி செய்தால் காவல்துறை, நீதிமன்றம் எதற்கு உள்ளது. குஜராத்தில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை மாலை அணிவித்து அழைத்து வந்த கட்சியினர் தான் பாஜ. அமித்ஷாவின் செருப்பை சுமந்து சென்றவர் பாஜ மாநில தலைவர் பண்டி சஞ்சய். கோயிலுக்கு சென்று சத்தியம் செய்ததால் கோயிலின் புனித தன்மை கெட்டுப்போனது. இதனால், பக்தர்களின் மனநிைலயும் பாதிக்கப்பட்டது. ஆகையால், உடனடியாக கோயிலை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் பாவங்கள் விலகும்,’ என்றார்….

The post தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ400 கோடி பேரம் பேசிய பாஜ ஆதரவாளர்கள் கைது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Telangana ,Baja ,Tirumalai ,TRS party ,Pals ,Ruling Party MLA ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...