×

சென்னை சாலையோர வியாபாரிகள் தொடர்பாக தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டைகள் வழங்க எதிர்ப்பு: மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ேமயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அதில் நடந்த விவாதம் வருமாறு: 152வது வார்டு கவுன்சிலர் பாரதி (திமுக): சென்னையில் சாலையோர கடைகள் நடத்தும் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று கணக்கெடுப்பு பணியை நடத்துகிறது. அந்தந்த மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்காமல் இந்த பணியை செய்கின்றனர். மேலும் அந்த நிறுவனமே தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வருகிறது. நெரிசல் மிகுந்த பகுதிகள், எந்தெந்த இடங்களில் சாலையோர கடைகளை வைக்க வேண்டும். வைக்க கூடாது என்பது கவுன்சிலர்களுக்கு தான் தெரியும். எனவே, எங்களோடு கலந்து ஆலோசித்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மேயர் பிரியா: சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இது பற்றிய தகவல் மண்டல குழு தலைவர்களும், கவுன்சிலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பகுதி வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகர்: எங்கள் பகுதியை சுற்றிலும் கோயில்கள் அதிகம் உள்ளது. போக்குவரத்து நெரில் மிகுந்த பகுதியாகவும் இருக்கிறது. அந்த இடங்களில் கடை போடக்கூடிய சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குகிறார்கள். இதனால், மக்கள் நடமாட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மிகவும், சிறப்பான முறையில் வேகமாக நடைபெற்று வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி கமிஷனரை பாராட்டுகிறேன். அதே நேரம் புதிதாக எந்த ஒரு மழைநீர் வடிகால் பணிகளை செய்ய வேண்டாம் என்று தடை போட்டு இருப்பதாக அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். இது சரியானது அல்ல. மொத்தமாக பணிகளை நிறுத்தக்கூடாது. உட்புற சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முடியவில்லை.கமிஷனர் ககன்தீப் சிங் பேடி: சென்னையில் 30,000 சாலையோர வியாபாரிகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். எனவே, சரியான புள்ளி விவரங்களை சேகரிக்க சாலையோர வியாபாரிகள் குறித்து தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடக்கிறது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றி மண்டல குழு தலைவர், கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பது நல்லது தான். 10 சதவீத அடையாள அட்டைகளை கவுன்சிலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்கிறோம். பருவமழை தொடங்குவதால், மழைநீர் வடிகால் பணிகளை புதிதாக தொடங்கினால், அதற்காக தோண்டப்படும் குழிகளால் சேறும், சகதியுமாக மாறி விடும். சென்னையில் உள்ள நகர் பகுதிகளுக்குள் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டது. புதிதாக மழைநீர் வடிகால் பணிகளை தொடங்க கூடாது என்று கூறவில்லை. அதற்கு தடை எதுவும் போடவில்லை. பொதுவான அவசர தேவைகளுக்கான பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. புதிய இடங்களில் குழிகளை தோண்ட வேண்டாம் என்று தான் கூறியுள்ளோம். இதனால் மழை காலங்களில் விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடியாத ஒரு சில இடங்களில் பேரிகார்டு அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன்: 10 சதவீதம் அல்ல 90 சதவீத அடையாள அட்டை கவுன்சிலர்கள் மூலம் வழங்க வேண்டும். தெருவோர வியாாரிகள் கணக்கெடுப்பு பணியின் போது, அவர்கள் எந்தெந்த ஏரியா என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பணிகளை முழுமையாக முடிந்த பின்னர் தான் அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும். துணை மேயர் மகேஷ்குமார்: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பதற்காக நோ பார்கிங் போார்டு வைத்து எச்சரிக்கிறோம். அதே போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளில் சாலையோர கடைகள் வைக்க கூடாது என்பதற்காக சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய தடை என்ற எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்.துணை ஆணையர் விஷூ மஹாஜன்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 2016ம் ஆண்டுக்கு பின்பு இப்போது நடக்கிறது. முதலில் சாலையோர வியாபாரிகள் யார் என்பதை அடையாளம் காணவும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இறுதியில் தான் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, அடையாள அட்டை பெற்று கொண்டால் மட்டுமே சாலையோர வியாபாரிகள் என்று கூறிவிட முடியாது. சான்றிதழ் பெற்ற பின்பு தான் அவர்கள் தொழில் செய்ய முடியும். யார் உண்மையான வியாபாரிகள் என்பதை ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  இவ்வாறு விவாதம் நடந்தது….

The post சென்னை சாலையோர வியாபாரிகள் தொடர்பாக தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டைகள் வழங்க எதிர்ப்பு: மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Council ,Ribbon Palace ,Mayer Priya ,
× RELATED வாசுதேவநல்லூரில் விரிவாக்கம் செய்து...