×

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறநிலையத்துறை சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு-அதிகாரிகள் குழு தீவிரம்

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் முறையில் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிட்டு அறநிலையத்துறை பெயர் பதிக்கப்பட்ட எல்லைக்கல் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1350 கோயில்களுக்கு சொந்தமான 24,500 ஏக்கர் நிலங்களில் 14,578 ஏக்கர் நிலங்கள் வருமானம் ஈட்டா சொத்துக்களாக உள்ளன.இது தொடர்பான பணிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு நில அளவை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன இதற்காக பயிற்சி பெற்ற லைசென்ஸ் சர்வேயரைக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களுக்கு ஒரு குழுவும், குத்தாலம், மயிலாடுதுறை தாலுகாக்களுக்கு ஒரு குழுவும் நியமித்து மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்களை முறைப்படுத்தவும், வருமானம் ஈட்டாமல் உள்ள சொத்துக்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதற்காகவும் சாட்டிலைட் மூலம் இயங்கும் டிஜிட்டல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் முறையில் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பெருஞ்சேரி கிராமத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வீரட்டேஸ்வரர் கோயில் செயலாளர் கோவிந்தராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, தனி தாசில்தார் விஜயராகவன் கூறுகையில், நில அளவை செய்யப்படும் அனைத்து திருக்கோயில் நிலங்களும், மென்பொருள் வாயிலாக வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை அளவிட்டு எண்கள் பதிவு செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக பிற்காலங்களில் எந்த நேரத்திலும் மேற்படி பதிவு குறியீடுகளைக்கொண்டு திருக்கோயில் நிலங்களை கண்டறியலாம். குறிப்பாக, திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமணம் செய்யப்படுவதை எளிதில் கண்டறியலாம். முறையற்ற ஆக்கிரமணங்களை அகற்றி திருக்கோயில் நிலங்களை மீளவும் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணிக்கு நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்….

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் அறநிலையத்துறை சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு-அதிகாரிகள் குழு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudura ,Kuttalam ,Digital Global Positioning System ,Hindu Religious Foundation ,Mayiladuthura District ,Mayiladudura District Dept. of Assets Digitally Survey-Officers Group ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில்