×

கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில்

*கிராம மக்கள் அச்சம்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 மாத காலமாக படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது மிகவும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக வரலாறு காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பமும் அளவுக்கு அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கொள்ளிடம் கடற்கரையோர பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் தினந்தோறும் பஸ்கள் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொள்ளிடம் புத்தூர், மாதானம் மற்றும் பொதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இளைஞர்கள் வந்து செல்வது அதிக எண்ணிக்கையில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு வாட்டி வதைத்து வருவதால் வெளியே வந்து செல்வதற்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பம் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் உடல் உபாதைகள் பலருக்கு ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த வெப்பத்தால் சாதாரணமாக தோல் பிரச்சனை, தலைவலி, குடல் பிரச்சனை மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் மனிதர்களுக்கு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

அதிக வெப்பத்தால் ஆண், பெண் முதியோர் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அதிக வெப்பத்தின் காரணமாக கொள்ளிடம் புத்தூர் மாதானம் அரசூர் எருக்கூர் புதுப்பட்டினம் உள்ளிட்ட கடைத்தெருக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வழக்கமாக வருவோரும் வராமல் இருந்து வருவதால் வியாபார கடைகளில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தினால் கொள்ளிடம், மாதானம், குன்னம், மாதிரவேளூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழக்கத்தை விட கடந்த ஒரு வார காலமாக வந்து செல்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெயில் காலத்தில் அதிக வெப்ப தாக்குதலால் ஏற்படும் அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருந்து வருவதால் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தினந்தோறும் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று கிராம மக்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதிக வெயிலின் தாக்கம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் கூறுகையில், தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பகல் பொழுதில் வெளியே செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். காலை மற்றும் மாலை பொழுதில் மட்டும் வெளியே செல்லலாம். ஏதாவது உடல் சம்பந்தமான பிரச்சனை என்றால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

The post கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில் appeared first on Dinakaran.

Tags : Mayiladudura district ,Dinakaran ,
× RELATED அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக...