×

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவன் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரத்தில் இருந்து வண்டலூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாமல்லபுரம் வரை இயக்கப்படும் மாநகர பஸ் தடம் எண் 115, இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. 9 மணியளவில் கேளம்பாக்கம் அடுத்த கண்டிகைக்கு பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் பஸ் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் இறங்கினர். ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணித்தனர். பஸ் சிறிது தூரம் சென்றதும் மேலக்கோட்டையூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிர்பாராத விதமாக முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த ஒரு மாணவன், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தான். பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் கீழே இறங்கி பார்த்தனர். அக்கம் பக்கத்தினரும் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்த மாணவன், நல்லம்பாக்கம், காந்தி நகர், கலைஞர் தெருவை சேர்ந்த பாபு மகன் யுவராஜ் (16) என்பதும், மாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த வாரம் வண்டலூர் அருகே இதேபோன்று மாநகர பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.*ஆட்டோ ஸ்டாண்ட் மாற்றப்படுமா?கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள், தங்களது புத்தகப்பைகளுடனும் பொதுமக்கள், பொருட்களுடன் ஓடி சென்று பஸ்சில் ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் படிக்கட்டில் தொங்கியபடி செல்ல வேண்டியதாக நிலை உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவன் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kemalambakam ,Kerambakam ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை