×

பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச்சு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் பேசினர். அதன் விபரம் வருமாறு:* செல்வப் பெருந்தகை(காங்கிரஸ்): அரசினர் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் உளமார வரவேற்கிறது. இந்தத் தீர்மானத்தை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இந்தித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். * ஜி.கே.மணி(பாமக): தமிழ்நாட்டிற்கு, தமிழ்மொழிக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தமிழுக்கு ஒரு இன்னல் என்று சொன்னால், உயிர் கொடுப்பேன் என்ற வரலாறு தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் உண்டு என்பதை நாம் மறந்துவிட முடியாது. முதல்வரால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.* நாகைமாலி( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்குமென்றும், ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்குமென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசாத மாநில மாணவர்களை, ஒன்றிய கல்வி நிலையங்களிலிருந்து வெளியே தள்ளும் முயற்சியாகவே இது உள்ளது. * ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): தமிழக முதல்வர், பிரதமருக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 8ல் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 பிராந்திய மொழிகளுக்கு சமமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலே உரிமை வழங்க வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளார். மொழியானாலும் சரி, மாநில உரிமைகளானாலும் சரி, அதனை நிலைநாட்டுவதில், இந்தியாவிலேயே தலைச்சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.* சிந்தனை செல்வன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி): ஒன்றிய உள்துறை அமைச்சருடைய இந்த அறிவிப்பு வருகின்றன என்று சொன்னால், 24 மணிநேர இடைவெளியிலே தமிழ்நாடு முழுவதிலும் இளைஞரணிக்கு உத்தரவிட்டு, இந்தி திணிப்பிற்கு எதிராக ஒரு மாபெரும் எதிர்ப்பை பதிவு செய்யக்கூடிய கடமையை திமுக செய்திருக்கிறது. * ஜவாஹிருல்லா(மமக):  என்னென்றும் மாநில மொழிகளைக் காப்பதில், நிலைநாட்டுவதில், தமிழ்நாடு முன்னிலையில் இருந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழை செம்மொழியாக்கக்கூடிய அந்தக் கோரிக்கை கலைஞரால் முன் வைக்கப்பட்டு, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில், 2004ம் ஆண்டிலே தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அண்ணாவும், கலைஞரும் இந்தி ஆதிக்கத்தை ஒழிக்க முடியும், அதை தோற்கடிக்க முடியும் என்பதற்கு எங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றார்கள். * சதன் திருமலைக்குமார்(மதிமுக): இந்தி மொழி பேசாதவர்கள் அனுமதிக்கும்வரை இந்தியை ஒருபோதும் ஆட்சிமொழி ஆக்கமாட்டோம் என்ற உறுதிமொழியையும் மீறி, இன்று இந்தித் திணிப்பை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கொண்டு வரத் துடிக்கின்றார்கள், ஒன்றிய அரசினுடைய தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள். * வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி):  இந்திய ஒன்றியம், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு மொழி வழி மாநிலங்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரிகம், தொன்மை, வாழ்வியல், வரலாறு ஆகியவை அடங்கிய ஒன்று. ஆனால், இந்தித் திணிப்பு இவற்றையெல்லாம் அழித்தொழித்து, ஒற்றை இந்தியா, ஒற்றை உணவு, ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைத் தேர்வு, ஒற்றை மொழி, இந்தி மொழி, என்கிற வகையில் அமைந்திருக்கிற இந்தத் திணிப்பை கலைஞர் வழிநின்று, முதல்வர் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். * ஈஸ்வரன்(கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட, நாம் இந்தித் திணிப்பிற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு முதல்வர் எடுத்திருக்கிற இந்த முன்னெடுப்பு, இதோடு நிற்கக் கூடாது. இந்தி பேசாத அனைத்து மாநிலங்களையும், ஒற்றுமைப்படுத்த வேண்டியது அவசியம்….

The post பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Assembly ,chennai ,nadu ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்...