×

தமிழகத்தில் முதல் முறையாக கருவிழி சரிபார்ப்பு முறையில் ரேஷன் பொருள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் அறிமுகப்படுத்த கூடிய திட்டம் சென்னை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கப்பட்டது. சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி: பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் பெறுவதில் சிரமம் இருக்கிறது என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழகத்தில் முதல்முறையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால் இது முழுமையாக அமல்படுத்தப்படும். கேரளா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வழங்குவதில் எவ்வித தேக்கமுமில்லை. கடந்த 15 மாதம் திமுக ஆட்சியில் 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post தமிழகத்தில் முதல் முறையாக கருவிழி சரிபார்ப்பு முறையில் ரேஷன் பொருள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Chakrapani ,Udhayanidhi Stalin ,Chennai ,Tiruvallikeni Nadukkuppam Fair Price Shop ,Cooperative Food and Consumer Protection Department ,
× RELATED சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர்...