×
Saravana Stores

டெல்டாவில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: 650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: அரியலூர் அருகே மதகு உடைந்தது

கொள்ளிடம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூரிலிருந்து காவிரியில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. தொடர்ந்து தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நாதல்படுகை கிராமத்தில் சாலையின் குறுக்கே தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 3 கிராம மக்களும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாலும், பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நேரடி விதைப்பு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வருவாய்த் துறையினர் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேரை  ஈவெரா பெரியார் மண்டபம் மற்றும் கிராம சேவை மையங்களில் தங்க வைத்தனர். இவர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் வருவாய்த்துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அரியலூர் பொன்னாறு வாய்க்கால் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் பகுதியான தா.பழூர் கோடாலிகருப்பூர் பகுதியில் உள்ள கதவணையில் வெள்ளப்பெருக்கால் இன்று காலை 7 மதகுகளில் முதல் மதகு உடைந்தது. இதனால் இதையொட்டியுள்ள அண்ணங்காரக்கோட்டை, கோடாலிகருப்பூர், கண்டியங்கொல்லை ஆகிய கிராமங்களுக்குள்ளும், வயல்களிலும் தண்ணீர் புகுந்தது.  520 ஏக்கர் சம்பா இளம்பயிர்கள் நீரில் மூழ்கின. 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் காவிரியில் வெள்ளப்பெருக்கால் காரையோரங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது….

The post டெல்டாவில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: 650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: அரியலூர் அருகே மதகு உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Delta ,Kolli ,Ariyalur ,Kollidam ,Mettur ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை