×

இலை கட்சி மக்கள் பிரதிநிதி திட்டியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பக்கத்து ஸ்டேட் பவர்புல் பெண்மணி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாராமே,  அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பக்கத்து ஸ்டேட் விஐபி புல்லட்சாமியும், பவர்புல் பெண்மணி இசையும் ‘பாசமலர்’ காட்சிகளை நினைவு படுத்தியது. அவர் தங்கச்சி என்று அழைக்க… இவர் அண்ணா என்று அழைக்க அந்த இடமே சினிமா தியேட்டர் போல மாறிவிட்டது என்று அப்போது பேசிக்கொண்டார்கள். இப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால் காட்சிகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாம். இதெல்லாம் சில மாதங்கள்தான் ஓடியது. ஆனால், புல்லட்சாமி பவர்புல் பெண்மணியை மதிக்காமல் தன் முடிவில் உறுதியாக இருப்பது டெல்லிக்கு தகவல் போச்சாம். இதனால, எதுக்கும் ஒத்துவராத சாமியை லைட்டா டைட் பண்ணுங்க என இசைக்கு உத்தரவாம். உடனே இசை பவர்புல் பெண்மணியாக மாறி ராஜ்நிவாசை திறந்துவிட்டு, புல்லட்சாமிக்கு எதிராக மக்களிடம் குறைகளை கேட்க ஆரம்பித்துவிட்டாராம். புல்லட்சாமி கட்சி அமைதியாக இருக்க. அவரது கூட்டணியில் உள்ள இலை கட்சியோ, இது அநியாயம்… மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்துவதா என புலம்பித் தள்ளினர். கடந்த ஆட்சியில் பவர்புல் பெண்மணியால் பந்தாடப்பட்ட இன்னொரு சாமி, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம். புல்லட்சாமி வண்டியில பெட்ரோல் இல்லை என்றால் சொல்லுங்க நான் போடுகிறேன். அதைவிட்டுவிட்டு அரசியல் ரீதியாக பவர்புல் பெண்மணிக்கு எதிர்ப்பு ெதரிவிக்காமல் புல்லட்டை ஸ்டார்ட் செய்யாமல் அதாவது விமர்சனம் செய்யாமல் இருப்பது என்று வறுத்தெடுத்துவிட்டாராம். மானத்தை விட்டு இப்படி முதல்வர் நாற்காலியில் புல்லட்சாமி ஒட்டிக்கொண்டு இருக்கலாமா என்றாராம். கூட்டணி கட்சி, எதிர்கட்சி என எல்லோரும் பவர்புல்பெண்மயின் தனி தர்பாரை எதிர்க்கும் போது, புல்லட்சாமி மவுனம் காக்கிறாராம். அது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் இருக்கும் ஒரு சீட்டும் தாமரைக்கு எதிராக மாற்றிவிடும் மூடில் இருக்கிறார்… அமைதியாக இருக்க பவர்புல் பெண்மணிக்கு அவர் பாடத்தை மெதுவாக கற்றுதருவார் என்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘உறவினர்களை வைத்து இலை கட்சியில் வேலை நடக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான ‘வைத்தியானவர்’ தேனிக்காரர் அணியில் ஐக்கியமாகி உள்ளார். இலை கட்சி இரு அணிகளாக பிரிந்த பின்னர், வைத்தியானவரின் நிழல் என்று சொல்லப்பட்டு வந்த ‘மூன்று எழுத்து பெயரை’ கொண்டவர், சேலத்துக்காரர் அணிக்கு சென்றார். இதனால் வைத்தியானவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு அடிக்கடி வருவது கிடையாதாம். தலைநகரில் இருந்து கொண்டே, டெல்டாவில் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளாராம். இதற்காக, வைத்தியானவர் தனது நெருங்கிய உறவினர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இந்த தகவல் சேலத்துக்காரர் அணிக்கு தெரியவந்ததும் அவரும் தன் உறவினர்கள் மூலம் அதை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நிதி நிறுவனம் மோசடி செய்த பணத்தை வாங்கி தருவதாக டுபாக்கூர் கும்பல் ஒன்று பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை கறக்கறாங்களாமே, எந்த மாவட்டத்துல…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், குயின் பேட்டை மாவட்டங்கள்ல நிதி நிறுவனத்தை தொடங்கி பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கிட்டு ஓடிப்போய்ட்டாங்க. பணத்தை சுருட்டியவர்கள் ஆரம்ப காலத்துல சைக்கிள்ல போவதற்கும் வழியில்லாம இருந்தாங்களாம். அதன்பிறகு, ரூ.1 லட்சத்துக்கு ரூ.10ஆயிரம் வட்டி தருவதாக ஆசை காட்டியிருக்காங்க, பணத்தாசையில, ஜனங்களும் இருக்குற நிலத்தையும், வீட்டையும் விற்பனை செஞ்சு, முதலீடு செஞ்சிருக்காங்க. இப்போது பணம் கிடைக்கவில்லையே என்று அழுகிறார்களாம். இவர்களை குறி வைத்து குயின்பேட்டை மாவட்டத்துல மட்டும், 300க்கும் மேற்பட்ட ஏஜென்டுகளை நியமிச்சு, பல கோடிகளில் வருமானம் பார்த்திருக்காங்க. வட்டிக்கு ஆசைப்பட்டு கோடிகளை கொட்டி கொடுத்தவங்க, மாதச்சீட்டு, வீடு, நிலங்களை அடமானம் வைத்தவர்கள், அதற்கு பணத்தை கட்ட முடியாமல், சூசைடுக்கு முயற்சிக்குறாங்களாம். ஏற்கனவே கோடிகளை சுருட்டிகிட்டு ஒரு கும்பல் ஓடிப்போயிடுச்சு. இப்போ, மற்றொரு கும்பல், பணத்தை நாங்கள் வாங்கிதர்றோம்னு, டீல் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்றாங்களாம். இதனால, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து கும்பலை கட்டுப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவங்களுக்கு பணத்தை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி கட்சினு அழைத்தால் கட்சி பெயரையே கெடுத்துவிடுவாங்கனு நினைத்து தாமரையை யார் விரட்டினா.. எங்கே விரட்டினா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் பட்டியில் முடியும் ஊரில் மாவட்ட தொழில் துறை சார்பில் சமீபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு இலைக்கட்சியை சேர்ந்த சாமி பெயர் கொண்ட எம்எல்ஏவையும் அழைத்திருந்தனர். அனைத்து கட்சி பிரமுகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கூட்டணி மற்றும் பழக்க வழக்க அடிப்படையில் தாமரைக்கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகளையும் அழைத்திருந்தார். அமைதியான முறையில் நடந்த இந்த முகாமில், திடீரென சம்பந்தமில்லாமல் சில பிரச்னைகளை எழுப்பத் தொடங்கினர். இதனால் வந்திருந்த மற்ற கட்சி நிர்வாகிகள் முகம் சுளித்தனர். கூட்டணியில் இருக்கிற மரியாதைக்கு கூட்டி வந்தால், தேவையில்லாமல் பஞ்சாயத்து பண்ணி இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துட்டாங்களே… மக்கள் நலம் விரும்பி நடக்கும் முகாமில் இப்படியா நடந்து கொள்வது என இலைக்கட்சி எம்எல்ஏ டென்ஷனாகி உள்ளார். மற்ற கட்சி நிர்வாகிகளும் கடுமையாக பேச தாமரைக்கட்சியினர் அமைதியாக கிளம்பிச் சென்று விட்டனராம். இனி இவங்களை இதுபோன்ற நிகழ்வுக்கு கூட்டி வராதீங்க என எம்எல்ஏவிடம் அங்குள்ளவர்கள் தெரிவித்து சென்றுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா. …

The post இலை கட்சி மக்கள் பிரதிநிதி திட்டியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus Party ,Ili Party People's Representative ,wiki Yananda ,Uncle ,Peter ,Leaf Party People's Representative ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...