×

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் , சமந்தா , மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிகாயிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

வேம்பு (சமந்தா) கணவன் முகில் (ஃபகத் ஃபாசில்) இல்லாத போது முன்னாள் காதலனை வரவழைத்து சந்தோஷமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தன் அப்பா ஏழரை வருடங்கள் கழித்து வரப்போகிறார் என சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்கிறது மகனும், மனைவியும் மேலும் மொத்தக் குடும்பமும், அவர்களுக்கு அதிர்ச்சியாக வந்திறங்குகிறார் மாணிக்கம் (விஜய் சேதுபதி) மற்றொரு புறத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் ஆபாச படம் பார்க்க திட்டம் தீட்டி வீட்டில் படத்தையும் நினைத்தப்படி போட்டு அமர்ந்தால் முதல் காட்சியிலேயே அதிர்ச்சி காத்திருக்கிறது, இவர்களெல்லாம் யார், எப்படி கதைக்குள் ஒன்றிணைகிறார்கள், நல்லவர் யாரு, கெட்டவர் யார்? யாருக்கு என்ன லாபம், என வாழ்க்கையின் எதார்த்தத்தை நுணுக்கமாக எடுத்து வைக்கிறது கிளைமாக்ஸ்,

விஜய் சேதுபதி இனிமேல் இவர் நடிப்பைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளை நாமளாக உருவாக்கினால் மட்டுமே முடியும். பலவாறு பாராட்டி முடித்தாகிவிட்டது, எந்த ஒரு ஹீரோவும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே யோசிக்கும் கதாபாத்திரம், ஆனால் அதை உள்வாங்கி, அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார். அதிலும் அவர் லாவகமாக புடவைக் கட்டி ‘நான் அழகா இருக்கேனா‘ எனக் கேட்பதும் ‘ அது வெறும் கல்லு சாமி’ என அழுதுகொண்டே சொல்லிச் செல்வதெல்லாம் அப்ளாஸ் ரகம்.

ஃபகத் ஃபாசில் அடுத்த நடிப்பு கிங், மனிதருக்கு கண்களில் உணர்வு வெளிப்பாடு என்பது அஸால்ட்டாக வருகிறது. ‘சார் சார், என்னாச்சு சார்‘ என கொஞ்சம் கொஞ்சமாக சிரித்து கொண்டே கேட்பது, ‘மனைவியை நினைத்து குடித்தது போல் அழுவது என ஒவ்வொரு காட்சிகளிலும் பிரித்தெடுக்கிறார். அடுத்த ஆச்சர்யம் சமந்தாதான்.

திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு பாத்திரம் ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயம். ஆனால் அதையும் மீறி என்னதான் தவறே செய்தாலும் பிடிக்காத ஆண் தொட வருகிறான் என்கையில் பெண்ணின் மனம் என்ன பாடுபடும் என்பதை கண்ணீரும், தவிப்புமாக வெளிக்காட்டி தனித்துவம் பெறுகிறார். மிஸ்கின் , ரம்யா கிருஷ்ணன் என படம் முழுக்க ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள். இவர்களையெல்லாம் மீறி படம் முழுக்க நம்மை ஆர்ப்பரிப்புடனும் , கைதட்டல்களுடனும் வைத்திருக்கிறார்கள் அந்த ஐந்து பதின்பருவ பையன்களும், ராசுக்குட்டியாக வரும் சிறுவன் அஷ்வந்த் அஷோக்குமாரும் அட யாருய்யா இந்தப் பசங்க என நம்மை கேள்விகெட்க வைத்துவிடுகிறார்கள்.

படம் குறித்து பேசவே மீண்டும் ஓரிரு முறை படம் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு நுணுக்கமான காட்சிகள் , மிஸ்கின் , நலன்குமாரசாமி, நீலன், தியாகராஜா குமாரராஜா இவர்கள் நால்வரும் தனித்தனியாக படம் எடுத்தாலே நாம் கண்களில் விளக்கெண்னை ஊற்றிக்கொண்டு காட்சிகளைக் காண வேண்டும். நால்வரும் இணைந்து ஒரு படத்திற்கு திரைக்கதை அமைத்தால் எவ்வளவு ஜாக்கிரதையாக படம் பார்க்க வேண்டும். அதேதான் ஒவ்வொரு ஃபிரேமிலும் வரும் சினிமா போஸ்டர்கள், பின்னணியில் கடந்து போகும் சப்தங்கள் என அனைத்தும் கேரக்டர்களாகவே வலம் வருகின்றன.

பிஎஸ்.வினோத், மற்றும் நிரவ் ஷா ஒளிப்பதிவு அற்புதம் செய்திருக்கிறது. அந்த டோன் உங்களுக்கு மட்டும்தான் வருமா லெவல்.  படத்திற்கு அடுத்த உயிர் என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் அருமையான பின்னணி இசை. கண்களை மட்டும் அல்ல காதுகளையும் ஷார்ப்பாக மாற்றிக் கொண்டு படம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு காட்சிகளுக்கும் பதிலாக சில பின்னணி சப்தங்களே பல இடங்களில் நிற்கின்றன. அந்த அமானுஷ்ய காட்சிதான் பின் பாதியில் படத்தின் எதார்த்தை சற்றே அசைத்துப் பார்க்கின்றன. மேலும் பின்பாதியில் இருக்கும் சற்றே நீளமான காட்சிகளையும் குறைத்திருக்கலாம்.

குடும்பம் என்றால் என்ன, காதல், காமம் என்றால் என்ன , எதார்த்தம் என்றால் என்ன, நல்லது எது கெட்டது எது, வாழ்க்கை என்றால் என்ன இப்படி அத்தனைக்கும் கதைக்குள் கரு இருக்கிறது. உண்மையில் அடல்ட் படம் எடுக்கிறேன் பேர்வழிகளாக வெறுமனே கெட்ட வார்த்தை பேசினால் அது அடல்ட் படம் என்னும் போக்கை மாற்றி எங்கே எப்படி கெட்ட வார்த்தை பிரயோகித்தால் அது தெளிவான அடல்ட் படம்  மேலும் அதையும் எப்படி ரசிக்க வைக்க முடியும் என பாடமே எடுத்திருக்கிறார் தியாகராஜா குமாரராஜா.

மொத்தத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்‘ தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல் கல்லாக நிற்கிறது.

Tags : Super Deluxe ,
× RELATED சர்வதேச பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்