×

பதிமூன்று முட்டாள்களும், ஆயிரம் பொற்காசுகளும்!

“டைரக்டர்கள் தமிழ்வாணன், பூபதி பாண்டியன்கிட்ட உதவி இயக்குனரா ஒர்க் பண்ணினேன். சினிமாவுக்கு வந்து 10 வருஷமாகுது. பல படங்கள்ல உதவி இயக்குனரா இருந்துட்டு, தனியே படம் பண்ண வந்தப்போ, தயாரிப்பாளர் ராமலிங்கம் சார்கிட்ட கதை சொன்னேன். நான் சொன்ன காமெடி கதை பிடிச்சிருந்ததால அவர் படம் தயாரிக்க முன்வந்தார். இப்படித்தான் ஆயிரம் பொற்காசுகள் படம் டேக்ஆஃப் ஆச்சு” என்கிறார் டைரக்டர் ரவி முருகையா. ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் மூலமாக இவர் இயக்குநர் ஆகிறார்.

“படத்தோட தலைப்பு கொஞ்சம் பழமையா இருக்கே?”

“ஆனா, படம் புதுசா இருக்கும். தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல ஷூட்டிங் நடத்தினோம். கதைக்களமே அந்த கிராமம்தான். அங்கேயே தங்கியிருந்து முப்பத்தெட்டு நாள்லே முழுப்படத்தையும் எடுத்து முடிச்சேன். தூய்மை இந்தியா திட்டத்துக்காக அந்த கிராமத்துல கழிப்பிடங்கள் கட்ட மக்கள் முடிவு பண்றாங்க. அதுக்காக அந்த கிராமமே சேர்ந்து தங்களுக்கான கழிப்பிடங்களுக்காக குழி தோண்டுறாங்க. அந்த சமயத்துல ஒருத்தருக்கு மட்டும் பூமியில புதைச்சி வச்சிருந்த ஆயிரம் பொற்காசுகள் கிடைக்குது. அவர் மூலமா இன்னொருத்தருக்கும் அது தெரிய வருது. முதல்ல ஒருத்தரே பொற்காசுகளை சுருட்டிக்க நினைக்க, அது ரெண்டு பேராகி, பிறகு 3 பேராகி, இப்படியே படிப்படியாக எல்லோருக்கும் தெரிஞ்சு போகுது. ஊரே அந்த பொற்காசுகளுக்காக சண்டை போட, கடைசியில அரசாங்கம் அதை எடுத்துட்டு போக வர, இப்படியொரு கலாட்டா கதையை இரண்டரை மணி நேரமும் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கேன். காமெடிதான் படத்தோட பிரதானம். புதையலுக்காக ஒட்டுமொத்த கிராமமும் என்னென்ன பண்ணுதுங்கிறதுதான் கான்செப்ட். அதை வச்சி, செமையா இந்த காமெடி படம் பண்ணிருக்கேன்.’’

“பிரியதர்ஷன் டைரக்‌ஷன்ல வெளிவந்த ‘மாலாமால் வீக்லி’ என்கிற இந்திப் படத்தோட கதையை இது நினைவுபடுத்துதே?”

இருக்கலாம். ஆனால் அந்தப் படத்துக்கும் இதுக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. அந்தப் படத்துல லாட்டரி சீட்டு வச்சி கதை பண்ணியிருப்பாங்க. இந்தப் படத்தோட கான்செப்ட்டும் சரி, திரைக்கதையும் சரி. எந்தப் படத்தோட சாயலும் இல்லாமல் நான் எழுதினது. படம் முழுக்கவே வர்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட திரைக்கதையோடு ஒருங்கிணைச்சி டிராவல் ஆகுற மாதிரிதான் இருக்கும். ஒரு கிராமத்துல ரொம்ப பிரபலமா சில கேரக்டர்கள் இருக்கும். அந்த மனிதர்களோட குணாதிசியம், அவங்களோட அளப்பறை, குட்டிக் கதைன்னு முக்கியமான சில கேரக்டர்களை சுற்றிய கதையா இது இருக்கும். பதிமூன்று முட்டாள்களை சுற்றிய கதையிது. யாராவது ஒருத்தர் அறிவாளியா இருந்தாலும் ஊருக்கு தெரியாமல் புதையலை பங்கு பிரிச்சிருக்கலாம். எல்லோருமே முட்டாள்களா இருக்கிறதால சுலபமா ஊருக்கே இந்த ரகசியம் தெரிஞ்சிபோயிடுது. கிளைமாக்சுலே ஏழு நிமிஷம் நான் ஸ்டாப் காமெடி இருக்கும். ஒரு புதையலுக்காக கிராமமே திரண்டு ஓடுற மாதிரியான காட்சி. இதுல ஸ்டண்ட் கூட வச்சிருக்கோம். அதுவும் பலத்த காமெடியா இருக்கும்.”

“ஹீரோ விதார்த், ஹீரோயின் ஜானவிகா கெமஸ்ட்ரி எப்படி?”

“ஒரு ஊர்லேருந்து கதை நடக்கிற இந்த ஊருக்கு வந்திருக்கிற கேரக்டர்தான் விதார்த். படத்துல சரவணனோட தங்கச்சி மகனா அவர் நடிச்சிருக்கிறார். சரவணன், ஊர்ல நம்பர் ஒன் சோம்பேறின்னு பெயர் எடுத்தவர். சாப்பாடு உள்பட அரசு கொடுக்கிற இலவசங்களை வச்சே வாழ்க்கையை ஓட்றவர். அவரோட கேரக்டரே ஹியூமரோடு பண்ணியிருக்கேன். அதேபோல் ஜார்ஜ் கேரக்டரும் ரசிகர்களுக்கு பிடிக்கும். புதையல் முதல்ல கண்டுபிடிக்கிறது அவர்தான். ஜானவிகா, இதுக்கு முன்னாடி ‘சைத்தான்’ படத்துலே நடிச்சிருக்காங்க. படத்துலே பெட்டிக்கடை வச்சிருக்கிற பொண்ணு. கிராமத்துலே இருந்தாலும் கிராமம் பிடிக்காம, சிட்டில போயிட்டு செட்டிலாகணும்னு விரும்புற கேரக்டர். அவருக்கும் விதார்த்துக்குமான கெமிஸ்ட்ரி, நம்ம கிராமங்களில் நாம பார்க்கிற யதார்த்தமான காதலா இருக்கும்.”

“முதல் படமே காமெடியா பண்றதுக்கு என்ன காரணம்?”

“லவ் கதை எழுத எனக்கு வராது. காரணம், நான் லைஃப்லே லவ் பண்ணினதே கிடையாது. இயல்பாகவே நான் காமெடி உணர்வு கொண்டவன், அதனால காமெடியோடு கலந்த இந்தப் படத்தை எழுதியது சுலபமா இருந்துச்சு. காமெடி சென்ஸ் படத்தோடு சரியான முறையில சேர்ந்திருச்சுன்னா, கண்டிப்பா அந்தப் படம் ஒர்க்அவுட் ஆகும். அந்த நம்பிக்கையோடுதான் இந்த கதையை எழுதியிருக்கேன்.”

Tags :
× RELATED இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!