×

இறந்த அதிகாரியின் கையெழுத்தை போட்டு ரூ.1.63 கோடி மோசடி செய்த டிடிடீசி கணக்காளர் கைது: உடந்தையாக இருக்க ரூ.10 லட்சத்துக்கு 6 லட்சம் கமிஷன்; உடந்தையாக இருந்த 11 ஊழியர்களும் சிக்குகின்றனர்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (டிடிடீசி) இறந்த அதிகாரியின் கையெழுத்தை போட்டு ரூ.1.63 கோடி மோசடி செய்த கணக்காளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு ரூ.6 லட்சம் கமிஷனாக வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தின் அனைத்து வரவு, செலவு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அந்நிறுவன முதன்மை நிதி அலுவலர் கணேஷ் கார்த்திகேயன் புகார் ஒன்று அளித்தார். அதில், கணக்காளர் கே.எஸ்.ஹரிஹரன் (52) என்பவர், 2020ம் ஆண்டு இறந்துபோன மேலாளர் சைமன் கே.சாக்கோ என்பவரின் கையெழுத்தை போட்டு வங்கியில் இருந்து அரசு பணம் ரூ.1 கோடியே 63 லட்சத்து 84 ஆயிரத்து 365 ரூபாய்  கையாடல் செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் கே.எஸ்.ஹரிஹரனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கணக்கு பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்த சைமன் கே.சாக்கோ உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு துணை மேலாளராக உள்ள ஆனந்தன் என்பவருடன் கூட்டு சேர்ந்து ஹரிஹரன் இறந்த மேலாளரின் கையெழுத்தை தானே போட்டு, வங்கி கணக்கில் இருந்து ரூ.9 கோடிக்கு மேல் எடுத்துள்ளார். அதில், ஹரிஹரன் ஒரு கோடியே 63 லட்சத்து 84 ஆயிரத்து 365 ரூபாயை தன் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். மேலும், தன் நம்பிக்கைக்கு உரிய 11 ஊழியர்களை தேர்வு செய்து அவர்கள் பெயரில் பணத்தை மாற்றி உள்ளார். அதற்காக அந்த 11 ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு ரூ.6 லட்சம் பணம் கமிஷனாக கொடுத்துள்ளது விசாரணையில் உறுதியானது. இதை தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட கணக்காளர் ஹரிஹரன் மற்றும் அவருக்கு உதவிய செய்த துணை மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு ஊரப்பாக்கம் ரேவதிபுரம் எஸ்.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்த கணக்காளர் ஹரிஹரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துணை மேலாளர் ஆனந்தன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்து 11 ஊழியர்களை தேடி வருகின்றனர். உயிரிழந்த அரசு அதிகாரியின் கையெழுத்தை போட்டு ரூ.1.63 கோடி மோசடி செய்த சம்பவம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* சஸ்பெண்ட்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வங்கி கணக்கிலிருந்து இறந்த அதிகாரியின் கையெழுத்தை போட்டு ரூ.9 கோடி மோசடி செய்த புகாரில், கணக்காளர் கே.எஸ்.ஹரிஹரன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த  துணை மேலாளர்கள் ஆனந்த், ஹரிஷ் ஆகியோரை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முதன்மை நிதி அலுவலர் கணேஷ் கார்த்திக்கேயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்….

The post இறந்த அதிகாரியின் கையெழுத்தை போட்டு ரூ.1.63 கோடி மோசடி செய்த டிடிடீசி கணக்காளர் கைது: உடந்தையாக இருக்க ரூ.10 லட்சத்துக்கு 6 லட்சம் கமிஷன்; உடந்தையாக இருந்த 11 ஊழியர்களும் சிக்குகின்றனர் appeared first on Dinakaran.

Tags : DTC ,Chennai, ,PTI ,Tamil Nadu Tourism Development Corporation ,TTTC ,Commission ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...