×

பாவமும் சாபமும்

நண்பர் ஒருவர் ஒருநாள் தன் ஜாதகத்தைக் காட்டி கவலையோடு இருந்தார்.

‘‘ம்… ஒவ்வொரு ஜோசியரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லுகிறார்கள்’’ என்று புலம்பினார்.

‘‘நீங்கள் ஏன் ஜாதகம் பார்க்கப் போனீர்கள்?’’ என்று கேட்டேன்.

‘‘உங்களுக்குத்தான் தெரியுமே. குடும்பத்தில் ஒன்று கிடக்க ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. எந்த சுப காரியங்களும் நடக்கவில்லை. முயற்சி செய்தாலும் எதுவும் முடியவில்லை. வியாபாரமும் வரவர மோசமாக போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்பதற்காக ஜோதிடரிடம் போனேன்’’.

‘‘சரி அவர் என்ன சொன்னார்?’’

‘‘ஒருவர் நீங்கள் செய்த பாவங்களின் சில விளைவுகள் தான் இப்பொழுது தசா புத்திகளாக, இப்படிக் காரியத் தடைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாவங்களுக்கு நீங்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். சில பரிகாரங்களை செய்ய வேண்டும்’’ என்று சொன்னார்.

‘‘சரி அப்படிச் செய்துவிட்டு பார்க்க வேண்டியது தானே’’ என்றேன். உடனே அவர் சொன்னார்.

‘‘நான் வேறு ஒரு ஜோதிடம் போனேன். அவரும் கணக்கு வழக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு, இதில் சில சாபங்கள் இருக்கிறது. அது தான் இத்தனைத் தடைகள். இந்தச் சாபங்கள் நீங்கும் வரை உங்கள் முயற்சிகள் வெற்றி பெறாது என்று மிகவும் பயமுறுத்திவிட்டார். அது தான் உங்களிடம் வந்தேன்.’’

‘‘சரி அதற்கு என்னிடம் ஏன் வந்தீர்கள்?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார் ‘‘நீங்கள் ஏதாவது இதற்கு விளக்கம் சொல்வீர்கள். கொஞ்சம் மனது
தெளிவடையும் என்பதற்காக வந்தேன்.’’

‘‘உங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும்?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘‘இவர் பாவம் என்கிறார். அவர் சாபம் என்கிறார். பாவம் என்றால் என்ன? சாபம் என்றால் என்ன?’’

‘‘இது நல்ல கேள்விதான். நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வி’’ என்று கேட்டுவிட்டு பதில் சொல்ல ஆரம்பித்தேன். பாவம் என்பது நாம் செய்கின்ற தீய செயல்கள். (sinful act) இதனுடைய விளைவுகளை நாம் எப்படியாவது அனுபவித்து தான் ஆக வேண்டும். இதை வள்ளுவருடைய வாக்கில் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,

‘‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்’’


தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய பாவத்தினுடைய விளைவுகளை நாம் வெவ்வேறு விதமாக அனுபவிக்க வேண்டி இருக்கும். பாவங்கள் குறித்து சாஸ்திரங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன அவ்வளவு ஏன், வடலூர் வள்ளலாரே சில பாவங்களைப் பற்றி நமக்குப் பட்டியல் கொடுக்கிறார்.

‘‘அது என்ன பாட்டியல்?’’

‘‘நிறைய உண்டு. சிலது சொல்கிறேன்.

1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்.
2. தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்.
3. மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்.
4. பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்.
5. கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்.
6. குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்
7. தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்.
8. தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்.

இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். இந்த பாவங்களை எல்லாம் செய்தால் அது தண்டனைக்குரியதா இல்லையா?’’

‘‘அது தண்டனைக்கு உரியது தான்’’ என்றார் அவர்.

‘‘அப்படிப்பட்ட பாவத்தின் விளைவு தான் நமக்கு பல்வேறு வடிவங்களில், சுப காரியத் தடைகளாகவோ, வியாபார நஷ்டங்களாகவோ, ஆரோக்கிய குறைவாகவோ, ஏதோ ஒரு விதத்தில் அமைந்து விடுகிறது. அதைத்தான் அந்த ஜோதிடர், பாவ தோஷ காலமாக இருக்கிறது என்று சொல்லி இருப்பார்.’’
‘‘அது என்ன பாப தோஷ காலம்?’’ என்று அவர் விளக்கம் கேட்டார். அதற்கு சொன்னேன்.

‘‘சில பாவங்களுக்கான விளைவு நமக்கு உடனடியாகக் கிடைத்து விடாது. ஆனால் எத்தனைக் காலமானாலும் கிடைக்காமல் போய்விடாது.’’ நாம் பலத்தினால், செல்வாக்கான பதவியினால், இல்லை நம்மிடம் உள்ள காசு பண பலத்தினால், சில காலங்கள் பாவ விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பாவங்கள் அந்தந்த காலத்தில் ஒன்றுக்கு பத்தாக பலமடைந்து கொண்டே இருக்கும். நம்முடைய எதிர்ப்புச் சக்தியை விட பாவத்தின் சக்தி பலமடையும் போது அது உடனடியாக நம்மை தாக்க ஆரம்பிக்கும். அதனால் பாவம் செய்துவிட்டு, ‘‘பாவமாவது, புண்ணியமாவது எனக்கு ஒன்றும் ஏற்படவில்லையே’’ என்று குதூகலிப்பதில் ஒரு அர்த்தமும் கிடையாது. அது அந்தந்த காலத்தில் செயல்படவே செய்யும்.

‘‘பாவத்துக்கு பதில் சொல்லிவிட்டீர்கள். சாபம் என்று ஒன்று இருக்கிறதே, அதற்கு என்ன பொருள்?’’ என்றார். ‘‘பாவம் என்பது நாம் செய்கின்ற தீவினைப்பயன். ஆனால் சாபம் என்பது நம்மால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய பலிக்கும் சொல் (Curse).’’

‘‘புரியவில்லையே’’ என்றார் அவர்.

‘‘இப்பொழுது புரியும்படி உதாரணத்தோடு சொல்லுகின்றேன். இப்பொழுது நீங்கள் ஒருவரிடம் பத்து ரூபாய் பொருளை, நூறு ரூபாய்க்குக்   கொடுக்கிறீர்கள். அவருக்கு அது பத்து ரூபாய் பொருள்தான் என்பது தெரியாது உண்மையிலேயே 100 ரூபாய் பொருள் தான் என்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்று விடுகிறார் அவருக்கு உங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் ஏமாற்றியதாகவும் நினைக்கவில்லை. ஆயினும் இப்பொழுது நீங்கள் ஒரு பாவம் செய்து விட்டீர்கள். அது பாதிக்கப்பட்டவருக்கு தெரிகிறதோ தெரியவில்லையோ உங்களுடைய மனசாட்சிக்குத் தெரியும். இப்பொழுது இந்த விளைவு உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் வரும்.’’

‘‘இதற்கு பிராயச்சித்தம்?’’

‘‘உண்டு. நீங்கள் அவரைச் சந்தித்து, “ஐயா, இது அவ்வளவு விலை கிடையாது, ஏதோ தெரியாமல் வாங்கி விட்டேன்” என்று சொல்லி, நியாயமான விலையை விட, கூடுதலாக நீங்கள் அவரிடம் வசூலித்த பணத்தை திரும்பக் கொடுத்து விடுவது பிராயச்சித்தம்.’’

‘‘இதைவிட இன்னொரு புரியும் படியான உதாரணத்தைச் சொல்லுகின்றேன். ஒரு கடைக்காரர் உங்களிடம் சில்லறையைத் தரும் போது நீங்கள் 100 ரூபாய் தந்ததை, 500 ரூபாய் என்று நினைத்துக் கொண்டு அதிகமான சில்லறையைத் தந்து விடுகிறார். கூட்டத்தில் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்களும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறீர்கள். இப்பொழுது வீட்டிலே அவர் கூடுதலாக தந்துவிட்டார் என்று தெரிகிறது. நீங்கள் சரி லாபம்தான் என்று வைத்துக்கொண்டு செலவு செய்து விடுகிறீர்கள். மறுநாள் கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்காரர் உங்களை வழக்கம் போல மகிழ்ச்சியாக வரவேற்கிறார்.

காரணம் உங்களிடம்தான் அவர் கூடுதலாகத் தந்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை. இப்பொழுது இது நீங்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ளாமல் ஏமாற்றியதாக ஆகிறது அல்லவா, அது ஒரு பாவம். அந்தப் பாவம் உங்களைத் தொடரும்.

“ஆனால் சாபம்’’ என்பது என்ன?

“வயிறெரிந்து கொடுக்கக்கூடிய ஒரு பழிச்சொல் (imprecation). அதிலே நீங்கள் என்ன மாதிரி ஆக வேண்டும் என்பது உட்பட இருக்கும்.  நீங்கள் ஒருவருடைய சொத்தையோ பொருளையோபிடுங்கிக் கொள்கிறீர்கள். அது அவருக்கும் தெரிகிறது. உங்களிடம் கெஞ்சுகின்றார். நீங்கள் உங்களுடைய வலிமையினாலே, அவரை உங்களை ஒன்றும் செய்ய விடாமல் பலவந்தப்படுத்தி, சொத்தை பிடுங்கிக் கொண்டு, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறீர்கள். வலிமை இல்லாத அவர் உங்களை எதிர்க்க முடியாமல், மண்ணை வாரி தூற்றி சாபம் விடுவார். “உன்னுடைய குடும்பம் விளங்காமல் போய்விடும். நீ இப்படி நோய் வந்து சாவாய்.” - இப்படி ஏதாவது ஒன்று. வாயால் சொல்ல வேண்டும் என்பது கூட கிடையாது.

வாயால் சொன்னால் நீங்கள் மேலும் அவரை வன்முறைக்கு உள்ளாக்குவீர்கள் என்பதற்காக உங்களை அப்படியே பார்த்துக் கொண்டு, கண்ணீரால் மனது வெம்பி, மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு சென்றுவிடுவார். இது சாபம். புராணங்களில் ரிஷிகள் ‘‘நீ இப்படி ஆகிவிடுவாய் அப்படி ஆகிவிடுவாய்’’ என்று சொல்லி அப்படி ஆனதாக பல வரலாறுகள் உண்டு. பாவத்துக்கு ஆளானாலும் சாபத்துக்கு ஆளாகக் கூடாது.

‘‘பாவங்களில் பெரும்பாலான பாவங்கள் பிராயச்சித்தத்தாலே கழிந்துவிடும். அதற்கு சாத்திரங்களில் வழி உண்டு. ஆனால் சாபத்தை மட்டும் அனுபவித்துத் தான் கழிக்க வேண்டும்.’’

‘‘அது சரி, இதை நாம் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா?’’ என்று கேட்டார்.

‘‘முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இதற்கான விளக்கம் சொல்கிறேன்.’’ என்றேன். அடுத்த வாரம் அந்த விளக்கத்தைப் பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்