
‘கழுகு’ சத்யசிவா எழுதி இயக்கியுள்ள படம், ‘ஃபிரீடம்’. சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையப்படுத்திய இப்படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷனில் பேசிய லிஜோமோல் ஜோஸ், தனக்கு அம்மை நோய் வந்தது பற்றி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ‘தொடர்ந்து நான் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். இதில் நான் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளேன். நார்மல் தமிழில் பேசுவதே எனக்கு ரொம்ப கஷ்டம். ஆனால், இதில் இலங்கை தமிழ் பேசி நடித்துள்ளேன். அதிலும் சத்யசிவா ஒவ்வொரு ஷாட்டிலும் கரெக்ஷன் சொல்லிக்கொண்டே இருப்பார்.
என்றாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் என்னை அன்புடன் கவனித்துக்கொண்டனர். சசிகுமாருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒருமுறை ஷூட்டிங்கின் போது எனக்கு சிக்கன்பாக்ஸ் (அம்மை நோய்) வந்துவிட்டது. அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னால் ஒருநாள் கூட படப்பிடிப்பு நின்றுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நான், சிகிச்சை பெற எப்படி லீவு கேட்பது என்று தடுமாறி நின்றபோது, சசிகுமார் எனக்கு ஆதரவாக பேசி, உடனடியாக என்னை கவனித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். பிறகு தகுந்த சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினேன்’ என்றார்.

